Published : 04 Jan 2019 11:10 am

Updated : 04 Jan 2019 11:10 am

 

Published : 04 Jan 2019 11:10 AM
Last Updated : 04 Jan 2019 11:10 AM

குறும்படம் மூலம் சாலை விழிப்புணர்வு

பொதுவாக, போலீஸ்காரர் என்றாலே கண்டிப்பானவர் என்ற எண்ணத்தால், பொதுமக்களுக்கு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக, போக்குவரத்து போலீஸார் நிற்கின்றனர் என்றால், வாகன ஓட்டுநர்கள் அந்த இடத்தை எச்சரிக்கையாகத்தான் கடந்து செல்வர். ஆனால், கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் தலைமைக் காவலரை, வாகன ஓட்டுநர்கள் வலியச் சென்று சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்வது ஆச்சரியப்படுத்துகிறது.அவர், மகேஸ்வரன் என்ற ராக்கி மகேஷ். அபராதம் விதித்து, நடவடிக்கை எடுப்பதுடன் கடமை முடிந்து விட்டது எனக் கருதாமல், குறும்படங்கள் மூலம் சாலை விதிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் இவர். குறும்படங்களுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் வாழ்த்தும் பெற்றுள்ளார். அவரது ஆலோசகர் பொன்ராஜின் நெருக்கமான நண்பர்களில் மகேஸ்வரனும் ஒருவர்.

"குறும்படங்கள் எடுக்கும் ஆர்வம் எப்படி வந்தது? இதற்கு உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது? மக்களுக்கு நீங்கள் கூற விரும்பும் கருத்து என்ன?" என சரமாரியான கேள்விகளுடன் தலைமைக் காவலர் மகேஸ்வரனை(52) அணுகினோம்.


"சேலம் மாவட்டம் வாழப்பாடிதான் எனது சொந்த ஊர். மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது கோவை மாநகர காவல் துறையில் சமூக வலைதளப் பிரிவில் (சோஷியல் மீடியா செல்) தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறேன். போக்குவரத்து போலீஸ்காரராக அதிக ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன்.

கடந்த 1993-ல் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று, 1994-ல் காவல் துறையில் பணியில் சேர்ந்தேன். இளங்கலை பொருளாதாரம், முதுகலை காவல் நிர்வாகம் படித்துள்ளேன். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் காலம்முதலே எழுத்து, சினிமா துறைகளின் மீது ஆர்வம் அதிகம்.

எழுத்தும், குறும்படமும்...

காவல் பணி மற்ற பணிகளைப் போன்றதல்ல. கொஞ்சம் வித்தியாசமான வேலை. பொதுவாக, பணிக்குச்சென்றுவந்த பின்னர், மன அழுத்தத்தைக் குறைக்க, டிவி பார்ப்பது, பாட்டு கேட்பது, புத்தகம் படிப்பது, விளையாடுவது போன்றவற்றில் ஈடுபடுவர். ஆனால், நான் மன அழுத்தத்தைக் குறைக்க, எழுத்துப் பணி, குறும்படங்களுக்கு கதை எழுதுதல் போன்றவற்றில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். பல நாட்கள் நள்ளிரவு நேரத்தை தாண்டியும், இந்தப் பணி தொடர்ந்தது உண்டு. குறும்படங்களுக்கு கதை எழுதும்போது, என்னை மறந்து, கதையில் ஒன்றிவிடுவேன். கதையும், கதாபாத்திரங்களும் சினிமாவாக என் மனத் திரையில் ஓடும். அதில் திருப்தி ஏற்பட்டால், அதை குறும்படமாக தயாரித்து, இயக்கும் பணியில் ஈடுபடுவேன்.முதியோர் இல்லத்தைப் பற்றி `பிஞ்சு மனசிலே`, மதுபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி `இப்படிக்கு போலீஸ்`, போக்குவரத்து விதிகளை வலியுறுத்தி `நில், கவனி, செல்`, `இது தகுமா`, ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி `அவர் வருவாரா`, போக்குவரத்து விதிகள் தொடர்பாக `என் தங்கச்சிக்கு கல்யாணம்`, இது தகுமா படத்தின் இந்தி மொழி பெயர்ப்பு ‘கியாகி சகிகே` ஆகிய 7 குறும்படங்கள் இயக்கியுள்ளேன்.

மேலும், போக்குவரத்து விதிகள் தொடர்பாக `மதிக்கணும் மதிக்கணும்`, தேர்தல் சமயத்தில் வாக்களிப்பதை வலியுறுத்தி `ஓட்டு போடுங்கோ`, அப்துல் கலாம் நினைவாக, இளைஞர்களை எழுச்சிப்படுத்தும் வகையில் ‘புறப்படுடா தம்பி புறப்படுடா’, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வலியுறுத்தி `எங்களுக்கும் உதவுங்கய்யா` ஆகிய நான்கு குறும்பாடல்களை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளேன்.

கோவை மாநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் இருந்த காலத்தில், அவரது ஒத்துழைப்பு, அனுமதியுடன் குறும்படம் எடுக்கத் தொடங்கினேன். குறுகிய காலத்தில் அதிக படங்களை இயக்கி விட்டேன். எனது முயற்சிக்கும், செயல்பாடுகளுக்கும், முந்தைய காவல் ஆணையர்கள், தற்போதைய காவல் ஆணையர் சுமித்சரண் மற்றும் துணை ஆணையர்கள், கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

ஒரு குறும்படம் தயாரிக்க குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது. எனது ஊதியம் மற்றும் சில நண்பர்களின் உதவியுடன் செலவுகளை சமாளிக்கிறேன். விழிப்புணர்வு படங்கள் எடுக்க, எனது மனைவி, மகன்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். விபத்துகளைத் தவிர்க்க, போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் சாலை விதிகளை பின்பற்றினால், பெரும்பாலான விபத்துகளை தவிர்க்கலாம்" என்றார்.

காவல் அருங்காட்சியகம்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கோவை மாநகர காவல்ஆணையராக பணியாற்றி வந்த அமல்ராஜின் முயற்சியால், கோவையில்

காவல் அருங்காட்சியகம் (போலீஸ் மியூசியம்) ஏற்படுத்தப்பட்டது. அப்போது,ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், அருங்காட்சியகத்துக்காக 4 ஆவணப்படங்களை இயக்கினார் மகேஸ்வரன். போதையில் வாகனம் ஓட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி இயக்கிய `என் தங்கச்சிக்கு கல்யாணம்` என்ற குறும்படம், சென்சார் துறை அனுமதியுடன் கோவையில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. ஒரு குறும்படம் திரையரங்கில் திரையிடப்பட்டது அதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைSign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author