Published : 28 Sep 2014 10:32 AM
Last Updated : 28 Sep 2014 10:32 AM

அதிமுகவினர் வந்த 500 வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், நேற்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுகவினர், 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பெங்களூர் செல்ல முயன்றனர். அவர்களை அத்திப்பள்ளி சோதனை சாவடியில், கர்நாடகா போலீஸார் திருப்பி அனுப்பினர்.

வெள்ளை உடைக்கு தடை?

தமிழகத்திலிருந்து பெங்களூர் சென்ற அனைத்து அரசு பேருந்துகளையும் நிறுத்தி சோதனையிட்ட போலீஸார், வெள்ளை உடை அணிந்தவர்களை பேருந்தில் இருந்து கீழே இறக்கினர். அவர்களை, மீண்டும் பேருந்துகளில் தமிழகத்துக்கு திருப்பி அனுப்பினர். இதில் ஒரு சிலர் கர்நாடகா போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை தமிழக அமைச்சர்கள், நிர்வாகிகள் பெங்களூரில் குவிந்தனர். இதேபோல் ஓசூர் வரை காரில் பயணம் செய்த அதிமுக நிர்வாகிகள் பலர், தங்களது வாகனத்தை ஓசூரில் நிறுத்திவிட்டு பேருந்து மூலம் பெங்களூர் சென்றனர். அதிமுக, கொங்கு இளைஞர் பேரவை கட்சியினர் சிலர் கொடிகளுடன் கர்நாடக எல்லைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். இதனால் இரு மாநில எல்லைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இரு மாநில போலீஸார் குவிப்பு

மாநில எல்லையில், பெங்களூர் தெற்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அகமத், தும்கூர் எஸ்.பி. ரமணகுப்தா, டி.எஸ்.பி.க்கள் அசோக்குமார், சித்தேஷ் ஆகியோர் தலைமையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்நாடக போலீஸார் தீவிர பாது காப்புப் பணியில் ஈடுபட்டனர். இதே போல் ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதியில் சேலம் சரக டி.ஐ.ஜி. வித்யாகுல்கர்னி, எஸ்.பி. கண்ணம்மாள் தலைமையில் 550-க்கும் அதிகமான தமிழக போலீஸார் குவிக்கப்பட்டனர். பெங்களூர் சென்ற வாகனங்கள் அனைத் தும் ஓசூர் வெளிவட்ட சாலையில் திருப்பிவிடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x