உயர் கல்வித்துறை செயலரை கைது செய்து ஆஜர்படுத்துக: காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் கல்வித்துறை செயலரை கைது செய்து ஆஜர்படுத்துக: காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

வழக்கு ஒன்றில் ஆஜராகாத உயர் கல்வித்துறை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

உயர் கல்வி சம்பந்தமான வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடந்து வருகிறது. பாரதியார் பல்கலைக்கழக கல்வி நிறுவனங்களை வெளிமாநிலங்களில் தொடங்கக்கூடாது என பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட  சுயநிதிக் கல்லூரிகள் வழக்கு தொடர்ந்தன.

அவ்வாறு திறக்க மாட்டோம் என பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் உறுதி அளித்த நிலையில், வாக்குறுதியை மீறி வெளி மாநிலத்தில் கல்வி நிறுவனங்களைத் திறந்ததாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது.

வழக்கை கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்திற்கு தள்ளிவைத்த நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உயர் கல்விச் செயலர் மங்கத்ராம் ஷர்மா, கல்லூரி கல்வி இயக்குனர் ஆர்.சாருமதி, மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் விவேகானந்தன், சிண்டிகேட் உறுப்பினர்களும், பேராசிரியர்களுமான சிங்காரவேலு, ஜெயக்குமார், சரவணக்குமார், ரவிச்சந்திரன், சின்னதுரை ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கடந்த ஒரு மாதத்துக்கு முன் உயர்கல்விச் செயலர் மங்கத்ராம் ஷர்மா தவிர அனைவரும்  ஆஜரானார்கள். மங்கத்ராம் ஷர்மாவை மீண்டும் இன்று ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ஆனால், இன்றும் உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா மட்டும் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத், திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பணிகள் தொடர்பாக வேலூர் சென்றுள்ளதால் ஆஜராக முடியவில்லை என தெரிவித்தார்.

அதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி கிருபாகரன், உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மாவை பிணையில் வெளிவரக்கூடிய பிடியாணையின் கீழ் கைது செய்து ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in