

அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைவரும் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட மலையாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்து என முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: "திருவோணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அழித்திட திருமால் வாமனராக அவதரித்து மூன்றடி மண் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த திருமால், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று திருமால் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், மக்களைக் காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமே திருவோணத் திருநாள் எனப்படுகிறது.
பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளின் முன்புறம் அரிசி மாவினால் கோலமிட்டு, அதனை வண்ணப் பூக்கள் கொண்டு அலங்கரித்து, நடுவே குத்துவிளக்கேற்றி, புத்தாடை உடுத்தி, அறுசுவை உணவு உண்டு, ஆடல், பாடல், விளையாட்டுகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர்.
அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.