கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான இடைக்கால தடையை விலக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான இடைக்கால தடையை விலக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் அடுத்தகட்ட கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்துவதற்கான இடைக்காலத் தடையை விலக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

முதற்கட்டம் மற்றும் 2-ம் கட்ட கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறவில்லை. இதற்கிடையில் 3-ம் கட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்துவது என்பது கூட்டுறவு கொள்கைக்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சில கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மனுதாக்கல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடவடிக்கைகளை, தொடர்ந்து மேற்கொள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அடுத்தகட்ட தேர்தலை நடத்த வேண்டியதன் அவசர அவசியத்தை விளக்கியும், இடைக்காலத் தடையை விலக்கிடவும், தொடர்ந்து தேர்தல் நடத்துவதற்கான ஆணையை வழங்கவும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆணையம் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த மனு மீதான இறுதி ஆணை வரும் வரை, ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 3-ம் கட்ட தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in