

வாச்சாத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து தருமபுரியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
தருமபுரி, அரூர் வட்டத்தில் உள்ள மலையடிவார கிராமம் வாச்சாத்தி. இங்கே 1992-ம் ஆண்டு வனத்துறை, காவல்துறை உள்ளிட்டோர் சந்தனக்கட்டை சோதனை என்ற பெயரில் ஊருக்குள் நுழைந்து 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் 2011-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி தருமபுரி நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது.
இதில் பலருக்குத் தண்டனையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந் நிலையில் ரூ.1.47 கோடி நிவாரணத் தொகையை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இதையடுத்து நேற்று முன் தினம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலம் எதிரே காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது. காலையில் தொடங்கியப் போராட்டம் நள்ளிரவு வரை தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கேயே உணவு தயாரித்து சாப்பிட்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில், சங்க நிர்வாகி களை அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், ஆட்சியர் விவேகானந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கண்ணம்மாள், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம், அரூர் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு, மாநில பொதுச்செயலாளர் பழனிச் சாமி, மாவட்ட தலைவர் சின்னராசு, அம்புரோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பழைய அரசாணை யில் தர வேண்டிய நிலுவைத் தொகையின் ஒரு பகுதி இன்று வழங்குவதாகவும், மீதியுள்ள தொகை தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தவுடன் தருவ தாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மக்கள் போராட் டத்தைத் திரும்பப் பெற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் நள்ளிரவில் கலைந்து சென்றனர்.