Published : 21 Jan 2019 05:50 PM
Last Updated : 21 Jan 2019 05:50 PM

ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்காக விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடித்தம்: அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

ஜாக்டோ - ஜியோ சார்பில் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால், ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட 7 அம்சக் கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த அமைப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக, அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு கிரிஜா வைத்தியநாதன் எழுதியுள்ள கடிதத்தில், அரசு அலுவலகச் செயல்பாடுகளைப் பாதிக்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபடுவது, தமிழ்நாடு அரசு நன்னடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.

கால வரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் நாட்களில் எடுக்கப்படும் விடுப்பு விதிமீறலாகக் கருதப்பட்டு, தொடர்புடைய ஊழியரின் பெயர் ஊதியத்துக்கோ, படிகளுக்கோ பட்டியலிடப்படக் கூடாது என்றும், அவர்களின் மேல் தமிழ்நாடு அரசு நன்னடத்தை விதிகளின் கீழ், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

தினக்கூலி அல்லது தொகுப்பு ஊதியம் பெறும் பகுதி நேர ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தெரிந்தால், அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும், தலைமைச் செயலாளர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

மருத்துவ விடுப்புகள் தவிர மற்ற விடுப்புகளுக்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ள கிரிஜா வைத்தியநாதன், மருத்துவ விடுப்புக்கான சான்றிதழ்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்ட பின்பே விடுப்பு அளிக்கப்படும் என்றும், அதில் முறைகேடு ஏதேனும் தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

போராட்டத்தின்போது, அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க தொடர்புடைய செயலாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு துறையிலும் உள்ள ஊழியர்களின் விவரங்களை காலை 10.15 மணிக்குள் அனுப்பவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x