

கோயம்பேடு சந்தையில் ஆக்கிர மிப்பு கடைகளை அகற்றுவதில் கடுமை காட்டிய அங்காடி நிர்வாகக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோயம்பேடு சந்தையில் 3,000-க் கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அங்கு மலர், பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதை கோயம்பேடு சந்தை அங்காடி நிர்வாகக் குழு நிர்வகித்து வருகிறது. அந்த சந்தையில் பல ஆண்டுகளாக ஆக்கிர மிப்பு கடைகளால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு இருந்து வந்தது. அதனால் பொதுமக்களும், சிறு வியாபாரிகளும், சந்தைக்குள் எளிதாக வந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.
அவ்வப்போது ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதும், மீண்டும் கடைகள் வைப்பதும் அங்கு வாடிக்கையாக இருந்து வந்தது. கோயம்பேடு சந்தை அங்காடி நிர்வாகக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக எஸ்.ராஜேந் திரன் பொறுப்பேற்றது முதல், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்று வதில் தீவிரம் காட்டி வந்தார். மேலும் சந்தைக்குள் பொது இடங்களை ஆக்கிரமித்து பொருட்களை வைத்திருந்த கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது டன், பொருட்களையும் பறிமுதல் செய்தார்.
அதனால் அவரை பணியிட மாற்றம் செய்யுமாறு கோயம்பேடு சந்தை வியாபாரிகள் பலர், சிஎம்டிஏ நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆக்கிரமிப்பு கடைகளை எதிர்த்து வந்த வியாபாரிகள் சங்கத்தினர், எஸ்.ராஜேந்திரனின் நடவடிக்கையை வரவேற்றதுடன், அவரை பணியிட மாற்றம் செய்யவே கூடாது என்றும் சிஎம்டிஏ நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையில் அவரை, கலை மற்றும் கலாச்சாரத் துறை இணை இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக உள்ள எஸ். கோவிந்தராஜன், கோயம்பேடு சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோயம்பேடு சந்தை வளாகம் அருகில் உள்ள சிஎம்டிஏவுக்கு சொந்தமான இடத்தை சிலர் அபக ரித்ததாகவும், அதை எஸ்.ராஜேந் திரன் கண்டுபிடித்ததாகவும், அதன் காரணமாகவே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்றும் வியாபாரிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.ஆக்கிரமிப்பு கடைகளை எதிர்த்து வந்த வியாபாரி கள், எஸ்.ராஜேந்திரனின் நடவடிக்கையை வரவேற்றதுடன், அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.