Published : 30 Jan 2019 03:34 PM
Last Updated : 30 Jan 2019 03:34 PM

108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றிய போலி பெண் மருத்துவர் கைது: மருத்துவ கவுன்சில் சோதனையில் சிக்கினார்

சென்னையிலுள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் இரண்டு ஆண்டுகளாகப் பணியிலிருந்த போலி பெண் மருத்துவரின் ஆவணத்தைச் சோதித்தபோது சிக்கினார். இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

சென்னை உட்பட இந்தியா முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. இது ஜிவிகே என்ற அமைப்பின் மூலம் இயக்கப்படுகிறது. 108 தவிர 104 மருத்துவ ஆலோசனை சேவையும் வழங்கப்படுகிறது.

108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அட்டெண்டர் இருப்பார்கள். மேலும், ஜிவிகே மையத்தில் மருத்துவர்களும் பணியில் உள்ளனர். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் ஜிவிகே 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தின் தலைமையகம் உள்ளது.

இங்கு சுமார் 16 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் ஜிவிகே மையத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளர் அசோக்குமார் என்பவர் கடந்த 12-ம் தேதி ஒரு புகார் ஒன்றை தேனாம்பேட்டை ஆய்வாளரிடம் அளித்தார்.

அதில், ''தங்கள் நிறுவனம் ஆடிட் செய்யும்போது பணியாளர் குறித்த விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது எங்கள் நிறுவனத்தில் 2017-ம் ஆண்டிலிருந்து மருத்துவராகப் பணியாற்றும் ரேச்சல் ஜெனிபர் என்பவரின் ஆவணங்களைச் சோதித்த போது சந்தேகம் ஏற்பட்டது. அதன் ஆவணங்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பியதில், அவர் கொடுத்த ஆவணங்கள் போலியானவை என தெரியவந்தது. அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று அசோக்குமார் புகார் அளித்திருந்தார்.

அசோக்குமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் ஜெனிபர் ரேச்சலை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேலூர் காந்தி நகரைச் சேர்ந்த ஜெனிபர் (26) என்பவர் நவ.2017-ல் பணியில் இணைந்துள்ளார்.

அவர் கொடுத்த சான்றிதழில் தனியார் மருத்துவமனையில் கடந்த 2015-ம் ஆண்டு எம்பிபிஎஸ் முடித்தது போன்று உள்ளது. இதைச் சோதித்த மருத்துவ கவுன்சில் அந்த எண்ணுக்குரிய சான்றிதழுக்குச் சொந்தக்காரர் பெரம்பூரைச் சேர்ந்த திருவெங்கிடேஸ்வரி எனத் தெரிய வந்தது. அவர் கொச்சினில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் வாங்கியவர் என்பதும் தெரியவந்தது.

இதன் பேரில் தலைமறைவாக இருந்த ரேச்சல் ஜெனிபரை தேனாம்பேட்டை போலீஸார் நேற்று மதியம் நீலாங்கரையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

ரேச்சல் ஜெனிபர் மீது பிரிவுகள் 419 (ஆள்மாறாட்டம்), 420 (மோசடி), 465 (போலிச் சான்றிதழ் அளித்தல்), 468 9குறிப்பிட்ட நோக்கத்துடன் ஆவணங்களைத் தயாரித்து அளிப்பது) , 471 (மோசடி நோக்குடன் போலி ஆவணங்களை அளித்து நம்பிக்கை மோசடி செய்தல்) , மற்றும் sec 15(3), of  Indian medical council Act (மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராகச் செயல்படுதல்), பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவருக்கு போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த பெண் உட்பட 3 பேரையும் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x