

அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த இனி வாய்ப்பே இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றன. இந்த சங்கங்கள் வலியுறுத்தும் கோரிக்கைகள் எல்லாம் அரசால் பரிசீலிக்கப்பட்டு செயல் படுத்த இயலாதவை என பலமுறை எடுத்துக் கூறப்பட்டது. எனினும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தொடங்கி, சில தவறான வழிமுறை களை கடைபிடிப்பது வேதனை தருகிறது. இவர்களின் சில கோரிக்கைகளை நிறை வேற்ற இயலாமைக்கான காரணங்களை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆண்டுதோறும் உயரும் ஓய்வூதிய நிதிச் சுமையால் நிர்வாக செலவை ஈடுகட்ட முடியாமல் அரசு திவாலாகும் நிலை உருவாகும் என்பதால் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் உலகம் முழுவதும் 174 நாடுகளில் கொண்டு வரப்பட்டது. நம்நாட்டில் மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் 2003-ல் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு அரசு சார்பில் 10 சதவீதமும் ஊழியர் சார்பில் 10 சதவீதமும் பிடித்தம் செய்து இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறு உள்ளதா என ஆராய குழு அமைப்போம் என்றுதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என அவர் கூறவில்லை.
அதன்படி, அமைத்த குழுவும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி இல்லாமல் போகும். அரசு வசூலிக்கும் வரியுடன் கடன் பெற்றுதான் சம்பளம், ஓய்வூதியம் தரவேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே, அரசின் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த கோரிக்கையை ஏற்க இயலாது.
7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்கியதால் வருவாய் பற்றாக்குறை 2017-18ல் ரூ.21,594 கோடியாக உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூ.24 ஆயிரம் கோடியாக உயரும். இதையும் அரசு கடன் பெற்றுதான் செலவு செய்கிறது. இந்நிலையில் ஊதிய நிலுவை வழங்க ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதையும் அரசு கடன் பெற்றுதான் வழங்க முடியும். இதை சமாளிக்க மக்கள் மீது கூடுதல் வரியை திணிக்க வேண்டிய நிலை ஏற்படும். நிதிப் பற்றாக்குறை உயர்வதை தவிர்க்கவும் முந்தைய ஊதியக்குழு வழிமுறையை பின்பற்றி சம்பள உயர்வு, பணப்பயன் வழங்கப்பட்டது. இப்போதைய நிதிநிலையில் ஊதிய நிலுவை கோரிக்கையை ஏற்க இயலாது என்பதை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசு ஊதியம்
மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர் கள் எண்ணிக்கை மிக குறைவு. ஆனால், மாநில அரசில் இவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். மேலும், இதே கல்வித் தகுதியில் இதர துறைகளிலும் ஊழியர்கள் பணிபுரிவ தால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட் டும் ஊதிய உயர்வு தர இயலாது. மேலும், ஊதியம் உயர்த்தினால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன், ஊழியர்கள் இடையேயான ஒப்பீட்டு சமநிலையை வெகுவாக பாதிக்கும். எனினும், இடை நிலை ஆசிரியருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சிறப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால்தான் இந்த கோரிக்கையையும் ஏற்க இயலாது என பலமுறை கூறியும் அரசை நிர்ப்பந்திக்கும் உள்நோக்குடன் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதேபோல் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி போரா டும் அரசு ஊழியர்கள் தனியார் நிறுவனங்களைவிட அதிக சம்பளம் பெறுகின்றனர். மொத்தம் ரூ.47,851 கோடி பொதுக்கடன் பெற்றுதான் அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த சங்கடங்களை எல்லாம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நன்கு அறிவார்கள். ஆனால், சிலர் சங்கம் நடத்துவதற்கும் தங்கள் பிரச்சினைகளை அரசியல் செய்வதற்கும் ஊழியர்களை தூண்டிவிட்டு தவறான பாதையில் வழிநடத்துகின்றனர்.
இதுதவிர 5 ஆயிரம் அரசுப் பள்ளிகளை மூடுவதாக தவறான கருத்து களை பரப்புகின்றனர். எண்ணற்ற படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வளர்ச்சி பணிகளை அரசு தான் செய்ய வேண்டும். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இப்போதைய நிதி நிலையை கருதி, துாண்டி விடும் சங்கங்களின் சதியில் விழாமல் போராட்டங் களை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும். மாறாக தொடர்ந்து பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுபவர் கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பணியிடை நீக்கம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் போராட்டத்தை ஒருங்கிணைத்த தாக நேற்று முன்தினம் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர் சங்க நிர் வாகிகள் 123 பேர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய மண்டலத் தில் 55 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மட்டுமல்லாமல், புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒருவர், அரியலூர் மாவட்டத்தில் 9 பேர் என அரசு ஊழியர்கள் 11 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் 57 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஒழுங்கு நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் பணியிடை நீக்கம் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் அரசுப் பள்ளிகளை மூடப் போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தவறான தகவல் பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலனை நடந்து வருகிறது. போராட்டம் தொடர்ந்தால் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிலையை சரிசெய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.
இதற்கிடையே, போராட்டத்தின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் 579 பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். இதுதவிர மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் என 160 பேர் பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் திங்கள்கிழமை முதல் பணிக்கு வராத ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.