தெஹல்கா மேத்யூஸ் ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி வழக்கு

தெஹல்கா மேத்யூஸ் ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி வழக்கு
Updated on
2 min read

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடியே 10 லட்சம் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் இதில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் பலியானார், சயானின் மனைவி குழந்தைகளும் விபத்தில் பலியானார்கள்.

இந்த நிலையில் கொடநாடு சம்பவம் தொடர்பாக தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அந்த ஆவணப்படத்தில்  சயான் மற்றும் மனோஜ் சில கருத்துகளைத் தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடிக்கு தொடர்பிருப்பதாக கனகராஜ் கூறியதாக சயான் மற்றும் மனோஜ் பேட்டி அளித்திருந்தனர்.

அவர்களது பேட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் அதிமுக சார்பில் அளித்த புகாரின் அடிப்டையில், மேத்யூஸ், சயன், மனோஜ் ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பரிவு போலீஸார் மனோஜ், சயான் இருவரையும் டெல்லியில் கைது செய்தனர்.

வழக்கில் சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் சிறையில் அடைக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி இருவரையும் சிறையில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் மறுத்து சயான் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் இன்று சென்னை வந்த மேத்யூஸ், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கொடநாடு சம்பவங்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய சென்னையில் வழக்கறிஞர்களை சந்திக்க வந்ததாக தெரிவித்தார்.

சயான், மனோஜ் மீது தொடர்ந்ததுபோல் தன்மீதும் வழக்கு தொடரப்படும், அதை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இவ்விவகாரத்தை சட்டப்படி நீதிமன்றத்திலும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் மீது  எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடியே 10 லட்சம் கேட்டு, உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது வழக்கறிஞர்கள் அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி கல்யாணசுந்தரம் முன் முறையீடு செய்துள்ளனர்.

கொடநாடு கொலை விவகாரத்தில் தன் பெயருக்கும், பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் செயல்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு முடியும் வரை தன்னைப் பற்றி பேச மேத்யூ சாமுவேலுக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேத்யூ சாமுவேல், ஜிபின் பொலியன் குடான், சிஜியா அனில், ஷிவானி, ராதாகிருஷ்ணன், சயன், வயலார் மனோஜ் ஆகியோருக்கு எதிராகவும் மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in