சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்; மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் தேசியக் கொடி ஏற்றினார்

சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்; மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் தேசியக் கொடி ஏற்றினார்
Updated on
1 min read

தமிழக அரசின் சார்பில் நாட்டின் 70-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவின் 70-வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா நடைபெற்றது. முப்படை வீரர்கள் அணிவகுப்புடன் வருகை புரிந்த ஆளுநரை முதல்வர் கே.பழனிசாமி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து முப்படை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளை ஆளுநருக்கு தலைமைச் செயலர் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், தேசியக் கொடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா. அந்த நேரம், விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து பூக்களை தூவிச் சென்றன.

இதையடுத்து முப்படை வீரர்கள், தமிழக காவல் துறையினர், சிறை, தீயணைப்பு மற்றும் வனத் துறையினர், கல்லூரி, பள்ளிகளில் உள்ள தேசிய மாணவர் படையினர், நாட்டுநலப்பணித் திட்டம், சாரண, சாரணியர் இயக்கத்தினரின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. இதில் முப்படை வீரர்கள், காவல் துறையினர் அணிவகுத்துச் சென்றனர். தமிழக அரசின் பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நடனம், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குடியரசு தின விழாவை முன்னிட்டு விழா நடைபெற உள்ள இடம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டன. மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடி மேற்பார்வையில் கூடுதல் காவல் ஆணையர்கள் மகேஷ்குமார் அகர்வால், ஆர்.தினகரன், இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். வெடிகுண்டு நிபுணர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி காலை முதல் அணிவகுப்பு முடியும்வரை மெரினா காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in