

‘‘நமது நாட்டில் கழிப்பறைகள் கட்டுவது மிகப் பெரிய சவாலான செயல்’’ என்று சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறினார்.
ஐஐடி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், ஐஐடி அல்லாத பொறியியல் கல்லூரிகளுடன் இணைந்து அனுபவ பகிர்வுகள், சொற்பொழிவுகள், சமூக பிரச்சினைக்கு விடை தேடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள போட்டிகள், ஐஐடி-யின் வெவ்வேறு துறைகளை பார்வையிடல் போன்ற நிகழ்வுகள் இந்த கல்வியாண்டு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
‘பால்ஸ்’என்றழைக்கப்படும் இந்தத் திட்டம் 4-வது ஆண்டாக சென்னை ஐஐடி-யில் நடத்தப்படுகிறது. பால்ஸ் திட்டத்தின் இந்த ஆண்டுக்கான தொடக்க விழா, சனிக்கிழமை ஐஐடி-யில் நடைபெற்றது. விழாவில் பேசிய ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறியதாவது:
தண்ணீர் இல்லா கழிப்பறைகள், உயிரி கழிப்பறைகள் என பல கழிப்பறைகள் வடிவமைக் கப்பட்டுள்ளன. எனினும், அவை வெற்றியடையவில்லை. ஏனென்றால், கழிப்பறைகள் கட்டுவதில் கலாச்சாரம், சமூகம் சார்ந்த கோணங்களும் உள்ளன.
கழிப்பறைக்கு சென்றுவிட்டு, கால் கழுவாமல் வருவதை ஒப்புக்கொள்ளாத சமூகத்தினர், தண்ணீர் இல்லாத கழிப்பறைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். அதேபோல் கழிப்பறைகளில் இருந்து மறு சுழற்சி செய்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராக இருந்தாலும் அதை பயன்படுத்த மக்கள் முன்வரமாட்டார்கள்.
எனவே, கழிப்பறைகள் கட்டுவது வெறும் பொறியியல் சார்ந்த விஷயம் அல்ல. இதில் சமூகவியலாளர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும்.
பொறியியல் மாணவர்கள், தகவல் தொழில்நுட்பம் அல்லது தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பாடத்தின் நேரடி தொடர்புடைய துறைகளில் மட்டுமே வேலை வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கின்றனர்.
ஆனால், சூரிய சக்தி, குப்பை மறு சுழற்சி, பொது சுகாதாரம், தண்ணீர் சுத்திகரித்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற பல விஷயங்களில் வாய்ப்புகள் உள்ளன என்பது முன்னாள் மாணவர்களின் அனுபவங்களை கேட்டறியும்போதுதான் புரியும்.
இவ்வாறு பாஸ்கர ராமமூர்த்தி பேசினார்.
விழாவில் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் கல்பாத்தி எஸ்.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.