Published : 07 Jan 2019 12:31 PM
Last Updated : 07 Jan 2019 12:31 PM

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தோல்வி பயத்தில், திமுகவும் அதிமுகவும் கைகோர்ப்பு- தினகரன் விமர்சனம்

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தோல்வி பயத்தில், திமுகவும் அதிமுகவும் கைகோர்த்துள்ளதாக, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவாரூர் தொகுதி எம்எல்ஏவும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி மறைவுக்குப்பின் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தலும், 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ரத்தினக்குமார் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பாக இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வர இருந்தது. மேலும் தேர்தல் ஆணையத்திலும் தேர்தலை ரத்து செய்யக்கோரி டி ராஜா மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்வதாகவும், மாநிலத் தேர்தல் ஆணையமும் மாவட்ட அதிகாரிகளும் இடைத்தேர்தல் தொடர்பாக எடுத்த அனைத்துப் பணிகளை நிறுத்துமாறும் தமிழகத் தேர்தல் அதிகாரிக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, திருவாரூர் இடைத்தேர்தலை தற்போது நடத்த வேண்டாம் என, திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தியிருந்தன.

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்திருப்பது ஜனநாயக கேலிக்கூத்து என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு, கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். இது ஜனநாயக நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகும்.

இந்த ஜனநாயக விரோத செயலை ஆளும் அதிமுகவுக்கு சாதகமாக செய்ய முயன்றபோதே கண்டித்திருக்க வேண்டிய திமுகவும் இதற்கு துணைபோனது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுகவுக்கும் தோல்வி பயம் இருந்ததையே இது காட்டியது.

திருவாரூரில் அமமுக வெற்றி பெறும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்தே இந்த விஷயத்தில் அதிமுகவும், தி.மு.க.வும் கைகோர்த்துள்ளன. இதற்கு சரியான தண்டனையை எப்போது தேர்தல் வந்தாலும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வழங்க திருவாரூர் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்" என தினகரன் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x