

சென்னை உத்தண்டியில் நடந்த சங் பரிவார் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை (ஆர்எஸ்எஸ்) தாய் அமைப்பாகக் கொண்டு செயல்படும் பாஜக, விஎச்பி, பாரதிய மஸ்தூர் சங்கம் (பிஎம்எஸ்), பாரதிய கிசான் சங்கம் (பிகேஎஸ்), இந்து முன்னணி, சேவா பாரதி, வித்யா பாரதி, முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கொண்ட சங்பரிவார் ஒருங்கிணைப்புக் குழுவின் தேசிய அளவிலான கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கூட்டம் சென்னை உத்தண்டியில் உள்ள சுவாமி சுத்தானந்த ஆசிரமத்தில் நேற்று நடந்தது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் ராம்லால், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த ஓராண்டில் பாஜகவின் செயல்பாடு கள் குறித்து அமித்ஷா அறிக்கை அளித்தார். மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை 6.40 மணிக்கு சென்னை வந்த அமித்ஷாவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு 11 மணி அளவில் அமித்ஷா டெல்லி புறப்பட்டுச் சென்றார்.