Published : 12 Jan 2019 09:59 AM
Last Updated : 12 Jan 2019 09:59 AM

சென்னையில் 3 நாள் இலக்கிய திருவிழா: ‘தி இந்து - லிட் ஃபார் லைஃப்’ இன்று தொடக்கம்

‘தி இந்து - லிட் ஃபார் லைஃப்’ 3 நாள் இலக்கிய விழா இந்த ஆண்டும் சென்னை சேத்துப்பட்டில் லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் இன்று முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

காலை 9:40-க்கு நடைபெறும் தொடக்கவிழாவில் மூத்த பத்திரிகையாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி பங்கேற்று உரையாற்றுகிறார்.

3 நாட்களும் லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில், ஸ்ரீ முத்தா வேங்கடசுப்பாராவ் கான்சர்ட் ஹால் உட்பட 4-க்கும் மேற்பட்ட அரங்குகளில் இலக்கியம், அரசியல், கலை, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 90-க்கும் மேற்பட்ட உரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு நாளும் ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழிலும் சில உரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவர்கள், கலைஞர்கள். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் இவற்றில் பங்கேற்கவிருக்கிறார்கள்.

இன்றைய முக்கிய அமர்வுகள்

முதல் நாளான இன்று, பிரதான அரங்கான ஸ்ரீ முத்தா கான்சர்ட் ஹாலில் மதியம் 2.30 மணிக்குத் தொடங்கவிருக்கும் அமர்வு ‘ஆட்சி என்னும் பொறுப்பு’ (Governance A Responsibility) என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் தமிழில் உரையாடுகிறார்கள். ஊடகவியலாளர் எஸ்.கார்த்திகைசெல்வன் இந்த உரையாடலை ஒருங்கிணைக் கிறார்.

'தி இந்து' பெவிலியன் அரங்கில் பகல் 11.35-க்குத் தொடங்கும் அமர்வில் ‘தி ரியல் அண்ட் தி மிஸ்டிக்: அன்ரேவலிங் தி ஹிடன் லேயர்ஸ்’ (The Real and the Mystique: Unravelling the hidden layers) என்ற தலைப்பில் வாழ்க்கை வரலாறு நூல்கள் எழுதுவதில் உள்ள சவால்கள் பற்றி எழுத்தாளர் வாஸந்தி, யாசீர் உஸ்மானுடன் உரையாடுகிறார்.

மூன்றாம் தளத்தில் உள்ள ‘தி இந்து ஷோ பிளேஸ்' அரங்கில் எழுத்தாளர், நாடகவியலாளர் ந.முத்துசாமிக்கான நினைவஞ்சலி நிகழ்வு நடக்கவிருக்கிறது.

நண்பகல் 12.15-க்குத் தொடங்கும் இந்த நிகழ்வில் பத்திரிகையாளர் தளவாய் சுந்தரம், இயக்குநர் ஞான. ராஜசேகரன், நடிகை வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் முத்துசாமி மற்றும் அவரது கலை, எழுத்து வாழ்க்கை பற்றி உரையாடு கிறார்கள். நாடக இயக்குநர் பிரளயன் இந்தத் தமிழ் உரையாடலை ஒருங்கிணைக்கிறார்.

'தி ஸ்லேட்' அரங்கில் ஜார்கண்டைச் சேர்ந்த பெண் கவிஞர் ஜசிந்தா கர்க்கடா, காஷ்மீரைச் சேர்ந்த பெண் கவிஞர் நிகாத் காஷிபா ஆகியோரின் உரையாடலை பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் ஒருங்கிணைக்கிறார். இந்நிகழ்வு காலை 10.30-க்குத் தொடங்குகிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x