

கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என, சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனால், தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாகிறது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தின் கடைசி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் பேசினார்.
அதில், "சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு இருவரும் விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக உள்ளதால், அதனைப் பிரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள். இதனைப் பரிசீலித்து விழுப்புரம் மாவட்டம், பெரிய மாவட்டமாக இருப்பதால், நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும். புதிதாக தோற்றுவிக்கப்படும் இந்த மாவட்டத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் விரைவில் தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார்" எனத் தெரிவித்தார்.
முதல்வர் பழனிசாமியின் இந்த அறிவிப்பு மூலம் கள்ளக்குறிச்சி தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உருவாகிறது.