Published : 30 Jan 2019 06:29 PM
Last Updated : 30 Jan 2019 06:29 PM

நாங்கள் வங்கிக் கணக்கு தொடங்கி இருக்காவிட்டால் நீங்கள் ஏழைகளுக்காகப் பணம் போட வாக்கு கொடுக்க முடியுமா?- ராகுலுக்கு தமிழிசை கேள்வி

பிரதமரை ஆறுமுகசாமி விசாரணைக்கு அழைக்கச் சொல்லி ஸ்டாலின் கூறுகிறார். அப்படியென்றால் சாதிக்பாட்சா மரணம் குறித்து நாங்கள் விசாரணை கேட்போம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தி.நகர் கமலாலயத்தில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி:

ஊழல் நிறைந்த நாடுகளில் நமது இந்தியா 48-வது இடத்தில் இருந்து தற்போது 78-ஆவது இடத்திற்கு வந்துள்ளது. பெரும்பாலும் பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல் குறைக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

இந்திய மக்கள் அனைவரின் வங்கிக் கணக்கில் பணம் போடுகிறோம் என்று பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி சொல்கிறார். பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு வங்கிக் கணக்கை தொடங்கி வைக்காவிட்டால் எந்த வங்கிக் கணக்கில் சென்று இவர்கள் பணம் போடுவார்கள்.

ராகுல் காந்தி என்னவோ  இப்போதுதான் அரசியல் செய்வது போலவும், அரசாங்கத்தைப் பார்க்காதது போலவும், ஏழை மக்களுக்காக குரல் கொடுப்பது போலவும், ஏழை மக்களுக்காக சிந்திப்பது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார்.

மாணவர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பு பெற்றது பற்றி எங்களால் நிரூபிக்க முடியும். ஏனென்றால் ஏற்கெனவே ஒரு கோடியே 75 லட்சம் பேர் பயன் அளிக்கும் வகையில் ருத்ரா வங்கியில் கடன் பெற்று சொந்தமாகத் தொழில் தொடங்கி பலன் பெற்றுள்ளனர். சாதாரண மக்கள் வியாபாரிகளாகவும், முதலாளியாகவும் மாறியு ள்ளனர்.

ஜாக்டோ - ஜியோ ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டது முழுமையான மகிழ்ச்சியைஅளிக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் என்பதை விட  பின்னால் இருந்து இயக்கிய அரசியல் கட்சிகளும், சூழ்ச்சிகளும் தான் அதிகம். இதனை உணர்ந்த ஆசிரியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.

கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை. கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்பட்டால் நிச்சயம் அறிவிக்கப்படும். தமிழகத்தில் பாஜக அடிப்படையில் வாக்குச்சாவடி அளவிற்கு இடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் பாஜக ஒரு சரியான கூட்டணியை அமைக்கும். சரியான போட்டி தமிழகத்தில் நிலவக்கூடும். ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தும். தமிழகத்தின் பல இடங்களில் வெற்றியை எட்டுவோம்.

எதற்கு எடுத்தாலும் பிரதமர் மோடியை இழுப்பது தமிழகத்தில் அரசியலாகவே உள்ளது. எல்லாவற்றையும்விட உச்சகட்டமாக பிரதமர் மோடியை ஆறுமுகசாமி கமிஷன் விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்கிறார்.

எதைப் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஸ்டாலின் ஒரு பதற்றத்தில் இருக்கிறார். அப்படியானால் நான் சொல்கிறேன், சாதிக் பாட்சா போன்றவர்களின் கொலை மர்மத்தில் ஸ்டாலினை விசாரிக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக நாங்கள் வைக்கிறோம்''.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x