Published : 28 Jan 2019 09:29 AM
Last Updated : 28 Jan 2019 09:29 AM

சுகாதாரத் துறைக்கு அதிக முன்னுரிமை: குறைந்த செலவில் மக்களுக்கு மருத்துவ வசதிகள் - மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

‘‘இந்தியாவில் சுகாதாரத் துறைக்கு அதிக முன்னுரிமை அளித்து, அதன் மூலம் மக்களுக்கு சர்வதேச தரத்தில் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்துள்ளோம்’’ என மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மதுரை தோப்பூரில் 201.75 ஏக்கரில் ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை மண்டேலா நகரில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று முன்தினமே மதுரை வந்து தங்கினர்.

இந்த விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து தனி ராணுவ விமானத்தில் மதுரை விமான நிலையத்துக்கு நேற்று காலை 11.25 மணிக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் விழா மேடைக்கு, 11.50 மணிக்கு வந்தார்.

விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி, மீனாட்சியம்மன் சிலையை நினைவுப் பரிசாக வழங்கி வரவேற்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசினார். முதல்வர் பழனிசாமி வாழ்த்திப் பேசினார். மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், மதுரை, விருதுநகர் எம்.பி.க்கள் கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேடையில் அமர்ந்தனர். மற்ற அமைச்சர்கள் கீழே விஐபிகள் வரிசையில் அமர வைக்கப்பட்டனர்.

விழாவில், பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதே விழாவில், தலா ரூ.150 கோடியில் கட்டப்பட்ட மதுரை, தஞ்சாவூர், நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திறந்து வைத்தார். மேலும், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களை தமிழகத்தில் 12 அஞ்சல் அலுவலகங்களில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ‘‘மதுரை வந்திருக்கும் எல்லோருக்கும் என்னுடைய வணக்கம்’’ என்று தமிழில் தனது பேச்சை தொடங்கினார். தொடர்ந்து மோடி பேசியதாவது: மதுரையின் அடையாளமே மீனாட்சி அம்மன் கோயில்தான். கலாச்சாரம் மிகுந்த நகரில் எய்ம்ஸ் அமைவது மகிழ்ச்சி. இந்த மண்ணுக்கு வந்தது பெருமையாக உள்ளது. மதுரை, தஞ்சை, நெல்லையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி உயர் சிகிச்சை மையங்களை திறந்துவைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தனது சேவையால் மருத்துவத் துறையில் தனி அடையாளத்தைப் பெற்றுள்ளது. அதுபோன்ற மருத்துவமனையை நாட்டின் 4 திசைகளிலும் அமைக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுகிறோம்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதன் மூலம், தமிழக மக்களின் நீண்டகாலக் கனவு நிறைவேறுகிறது. விரைவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும். கடந்த 4 ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களும், 60 செவிலியர் படிப்பு இடங்களும் உருவாக்கப்படும்.

2025-ம் ஆண்டுக்குள் காசநோய் உள்ளிட்ட தொற்று நோய்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மத்திய அரசு மக்களுக்கு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதற்கு, மதுரை எய்ம்ஸ் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.

சுகாதாரத் துறைக்கு அதிக முன்னுரிமை அளித்து, அதன் மூலம் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் சுகாதார சேவையை சர்வதேச தரத்தில் குறைந்த செலவில் கிடைக்கச் செய்துள்ளோம். பிரதமரின் பேறுகால கவனிப்புத் திட்டம் மற்றும் பிரதமரின் பாதுகாப்பான பேறுகாலத் திட்டம் போன்றவை பாதுகாப்பான பிரசவத்தை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளன.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டிருப்பது மற்றொரு மாபெரும் நடவடிக்கை. நமது நாட்டுக்கு தேவையான உலகளாவிய சுகாதாரக் காப்பீடு வழங்கும் வகையில் மிகுந்த கவனத்துடன் சிந்தித்து உருவாக்கப்பட்ட திட்டம் இது. உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்படுவோருக்கு இதுவரை இல்லாத வகையில் முழு அளவிலான காப்பீட்டு வசதியை வழங்கும் திட்டமாக ஆயுஷ்மான் பாரத் அமைந்துள்ளது.

உலகின் மாபெரும் திட்டம்

ஒட்டுமொத்த ஆரம்ப சிகிச்சை மற்றும் நோய்த் தடுப்பு சேவைகளை வழங்க ஒன்றரை லட்சம் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பிரதமரின் பொது சுகாதாரத் திட்டத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வகை செய்கிறது. இத்திட்டம் உலகிலேயே மாபெரும் சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும்.

இத்திட்டம் தொடங்கிய 3 மாதங்களில் 10 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இத்திட்டத்தின்கீழ், 1.57 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெற உள்ளனர். சுகாதார சேவை வழங்கும் முன்முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக, அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இடம் பெறாததால் சர்ச்சை

பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த அரசு விழாவில் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கவில்லை. விழா முடிந்த பிறகும் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நடந்த இவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றிருக்கலாம் என விழாவில் பங்கேற்றவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். அதுபோல், விழா நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படாததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுபோல், விழாவில் பிரதமர் மோடி எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டும் முன்பு, அதற்கு முன்னோட்டமாக மதுரையைப் பற்றிய சில நிமிட வீடியோ படக்காட்சி மேடையில் உள்ள அகன்ற திரையிலும், பார்வையாளர்கள் பகுதி திரையிலும் ஒளிபரப்பப்பட்டது. சில நொடிகளில் அந்த வீடியோ காட்சியும் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விழா தொகுப்பாளர் சுதாரித்துக் கொண்டு உடனடியாக பிரதமரை அடிக்கல் நாட்ட அழைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x