

தன்னை கைவிட்டுச் சென்ற தனது பெற்றோரைத் தேடி டென்மார்க்கில் வசித்து வரும் கிராபிக்டிசைனர் கோவையில் தேடி வருகிறார்.
2-வது முறையாகக் கோவைக்கு வந்துள்ள இந்த கிராபிக் டிசைனர், இந்த முறை தனது பெற்றோரையும், உறவுகளையும் கண்டுபிடித்துவிடும் நம்பிக்கையில் இருக்கிறார்.
டென்மார்க், அல்பார்க் நகரில் வசித்து வரும் கஸ்பர் ஆன்டர்சன் என்பவரே கோவை லிங்கானூரில் முகாமிட்டு தனது பெற்றோரைத் தேடி வருகிறார்.
கடந்த 1975-ம் ஆண்டு, கோவையைச் சேர்ந்த டி. அய்யாவு, சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் கஸ்பர் ஆன்டர்ஸன். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ராஜ் குமார். பிறந்து 30 நாட்களில் தாய் சரஸ்வதி இறந்துவி்ட்டார், தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால், அருகில் உள்ள ப்ளூமவுண்டன் குழந்தைகள் காப்பகத்தில் அய்யாவு தனது மகன் ராஜ்குமாரை சேர்த்தார். அந்தக் காப்பகத்தை மேரி கேத்தரீன், பிரகாஷ் ஆகியோர் நடத்தி வந்தனர்.
காப்பகத்தில் 4வயதுவரை வளர்ந்த ராஜ் குமாரை, டென்மார்க்கைச் சேர்ந்த கெல்ட் ஆன்டர்ஸன், பெர்த் ஆன்டர்ஸன் ஆகியோர் தத்தெடுத்தனர். அவருக்கு கஸ்பர் ஆன்டர்ஸன் எனப் பெயரிட்டு டென்மார்க் அழைத்துச் சென்றனர். அங்கு டென்மார்க் குடியுரிமையும் பெற்றார்.
டென்மார்க்கில் உள்ள அலாபர்க் நகரில் படித்து பட்டம் வெற்ற ஆன்டர்ஸன், தற்போது கிராபிக் டிசைனராக பணியாற்றி வருகிறார். தனது உண்மையான பெற்றோர்களை கண்டுபிடிக்கும் ஆர்வத்தில் தனது வளர்ப்பு பெற்றோரிடம் விவரங்களைக் கேட்டறிந்து, கோவை லங்கனூருக்கு ஏற்கனவே ஒருமுறை வந்துள்ளார். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை ஊடகங்களில் செய்தி வெளியிட்டும் அய்யாவு குறித்து எந்த தகவலும் இல்லை என்பதால், ஏமாற்றத்துடன் டென்மார்க் சென்றார்.
இந்நிலையில், 2-வது முறையாக தற்போது கோவை லிங்கனூருக்கு வந்துள்ள ஆன்டர்ஸன், நெதர்லாந்து நாட்டின் சைல்டு அகைன்ஸ்ட் டிராபிக்கிங்(ஏசிடி) அமைப்பின் உதவியை நாடியுள்ளார். ஆண்டர்ஸனுக்கு ஏசிடி அமைப்பின் இந்தியப் பிரதிநிதி அஞ்சலி பவார், உறுப்பினர்கள் உதவி வருகின்றனர்.
மேலும், திருப்பூரில் உள்ள சமூகக் கல்வி மற்றும் மேம்பாட்டுத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கோவையில் தனது பெற்றோர்களை ஆன்டர்ஸன் தேடி வருகிறார்.
இதுகுறித்து ஆன்டர்ஸன் கூறுகையில், “ என்னுடைய உண்மையான பெற்றோர்களை சந்திக்க வேண்டும் என்ற முயற்சியில் 2-வது முறையாக கோவைக்கு வந்துள்ளேன். என்னைத் தத்தெடுப்பதற்கு முன் எனக்கு ராஜ் குமார் என்று பெயரிட்டிருந்தனர். தற்போது நாங்கள் விசாரித்த வகையில் எனக்கு தந்தை அய்யாவு, எனக்கு பாட்டி மாரியம்மாளுடன் லிங்கனூரில் உள்ள கருப்பராயன் கோயில் அருகே வசித்து வந்தார் என்று தெரிந்தது. ஆனால், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில், கடந்த 1986-ம் ஆண்டு இந்த வீட்டையும், சொத்துக்களையும் விற்றுவிட்டு சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். எனக்கு பெற்றோரைக் கண்டுபிடித்துவிடுவேன் என நம்புகிறேன் “ எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஏசிடி அமைப்பின் உறுப்பினர் பவார் கூறுகையில் “ ஆன்டர்ஸனைத் தத்தெடுக்கும் போது அவர் அனாதையில்லை, தந்தை,உறவினர்கள் இருந்துள்ளனர். அனாதை என்று கூறி தத்தெடுத்தது ஒருவகையில் குழந்தை கடத்தலாகும். தத்தெடுத்தல் என்ற பெயரில் குழந்தை கடத்தல் அதிகமாக நடக்கிறது “ எனத் தெரிவித்தார்.