Published : 17 Jan 2019 08:28 AM
Last Updated : 17 Jan 2019 08:28 AM

கோடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷயான், மனோஜ் ஜாமீனில் விடுவிப்பு; போலீஸ் விளக்கத்தை ஏற்க நீதிபதி மறுப்பு: எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் வழக்கு விசாரணை

கோடநாடு குறித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் போலீஸாரின் விளக்கத்தை ஏற்க மறுத்து ஷயான், மனோஜ் ஆகிய இருவரையும் ஜாமீனில் நீதிபதி விடுவித்தார். எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை வெளியிட்டார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தனிப்படை போலீஸார், டெல்லி சென்று கடந்த 13-ம் தேதி ஷயான், மனோஜை கைது செய்தனர்.

கடந்த 14-ம் தேதி காலையில் தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மாலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஷயான், மனோஜ் இருவர் மீதும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தல், தமிழக முதல்வர் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச் சாட்டுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி சரிதா, "இருவரின் பேட்டியால் எங்கு கலவரம் ஏற்பட்டது, அரசுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது, ஷயான், மனோஜ் ஆகியோர் மீது புகார் அளித்தவர்களிடம் விசா ரணை நடத்தினீர்களா?" என போலீஸாரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு வழக்குப் பதிவுக்கான காரணங்கள் குறித்து போலீஸார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்குப் பதிவு மீதான சந்தேகங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அல்லது வழக்குப் பதிவுகளின் பிரிவுகளை மாற்றினால் மட்டுமே ஷயான், மனோஜை சிறையில் அடைக்க அனுமதிக்க முடியும் என்று கூறினார்.

இதற்கிடையில் தங்கள் தரப்பு வழக்கறிஞர் யார் என்று ஷயான், மனோஜிடம் நீதிபதி கேட்டார். தங்கள் தரப்பு வழக்கறிஞர் டெல்லியில் இருந்து வரவேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். அப்போது, வழக்குப்பதிவு குறித்து உரிய விளக்கம் கேட்டு, குற்றப்பிரிவு போலீஸாருக்கு நீதிபதி கடிதம் ஒன்றை அனுப்பினார்.

விசாரணையும் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் இரவு 11 மணியளவில் மீண்டும் ஷயான், மனோஜை சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி சரிதா இல்லத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். நள்ளிரவில் மட்டும் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

அப்போது வழக்குப் பதிவு பிரிவுகளில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று நீதிபதியிடம் போலீஸார் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், போலீஸாரின் விளக்கங்களை நீதிபதி ஏற்க மறுத்து ஷயான், மனோஜை ஜாமீனில் விடுதலை செய்தார். மேலும் இந்த வழக்கை ஜனவரி 18-ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினத்தில் நீதிமன்ற விசாரணையின்போது இருவரும் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார். இதையடுத்து நள்ளிரவு 3 மணியளவில் இருவரையும் போலீஸார் விடுவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷயான், “காவல் துறை யின் விளக்கத்தை நீதிபதி ஏற்கவில்லை. டெல்லி போலீஸார் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தனர். இங்கு அச்சுறுத்தல் இருப்பதுபோல் உணர்கிறோம்’ என்றார்.

பின்னர், அவர்கள் அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து தங்கள் சொந்த ஊரான கேரளாவுக்குச் சென்றனர். இருவரும் தங்கள் தரப்பு வழக்கறிஞருடன் நாளை (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x