Published : 14 Jan 2019 06:16 PM
Last Updated : 14 Jan 2019 06:16 PM

கோடநாடு காணொலியில் பேசிய சயான், மனோஜ் கைது; நீதிமன்றத்தில் ஆஜர்: அதிமுக தொழில்நுட்ப நிர்வாகி புகாரில் நடவடிக்கை

கோடநாடு சம்பவங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுகளைக் கூறிய சயன், மனோஜ் ஆகிய இருவரும் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி புகாரின் பேரில் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்..

கோடநாடு காவலாளி கொலை, கொள்ளை தொடர்பான பிரச்சினை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம்  தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் காணொலி ஒன்றை வெளியிட்டார்.  அது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

விபத்தில் உயிரிழந்த கனகராஜ் என்பவர் கூறியதாக  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருக்கும் சயன் மற்றும் அவனது கூட்டாளி வாலையார் மனோஜ் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்திப் பேசி இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த வீடியோ முதல்வர் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது என ராஜன் செல்லப்பாவின் மகனும் அதிமுக தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகியுமான ராஜன் சத்யா என்பவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரைப்பெற்ற மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மேத்யூ, சயான், வாலையார் மனோஜ் ஆகியோர் மற்றும் சிலரின் மீது ஐபிசி பிரிவு 153 (A)- (இருபிரிவினரிடையே மோதல் போக்கை உருவாக்குதல்) 505 (1)(a)(b)- (உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல்) (மக்களிடையே பயத்தை உருவாக்குதல்) 505 (2)- (அரசுக்கு எதிராக அவதூறைப் பரப்பி விரோதத்தைத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து மேத்யூ சாமுவேல், சயன், வாலையார் மனோஜ் ஆகிய மூவரையும் கைது செய்ய இரு தனிப்படைகள் டெல்லி  மற்றும் கேரளா விரைந்தன. இந்நிலையில் நேற்றிரவு டெல்லியில் சயன் மற்றும் வாலையார் மனோஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட  இருவரையும் விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னை கொண்டு வந்த மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார்  விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரையும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் சரிதா முன் ஆஜர்படுத்தினர்.

குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் நீதிமன்றத்துக்குள் செய்தியாளர்களை அனுமதிக்காமல் கெடுபிடி செய்தனர். பொதுவாக செய்தியாளர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை செய்தி எடுப்பது சகஜம். ஆனால் அரசு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் போலீஸார் கெடுபிடி அதிகம் இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x