

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிகளில சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பகல் 11.15 மணியளவில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது. விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் நட்டா, பியூஸ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ மற்றும் சுகாதார திட்டங்களை பட்டியலிட்டார். பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிகளில சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். அத்துடன் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளிட்ட திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவை தொடர்ந்து, அதே மைதானத்தில் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றொரு மேடைக்கு நரேந்திர மோடி சென்று, பாஜக பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.