Last Updated : 07 Jan, 2019 09:17 AM

 

Published : 07 Jan 2019 09:17 AM
Last Updated : 07 Jan 2019 09:17 AM

சட்டப்பேரவையில் நிற்கிறேன் என்பதே மறந்துவிட்டது; கருணாநிதியை நினைத்து குழந்தையைப்போல் அழுதுவிட்டேன்: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 3-ம் தேதி, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இரங்கல் தீர்மானத்தின் மீது திமுக சார்பில்   அக்கட்சியின் பொருளாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் பேசியது அனைவரையும் உருகச் செய்தது. கருணாநிதியுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டே வந்தவர், ஒரு கட்டத்தில் துக்கம் தாளாமல் கதறி அழுதார். சில நிமிடங்கள் பேச முடியாமல் இருக்கையில் அமர்ந்து அவர் அழுத காட்சியால் ஒட்டுமொத்த அவையும் நிசப்தத்தில் ஆழ்ந்தது. பேரவையில் இருந்த எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பத்திரி கையாளர்கள், காவலர்கள் என அனைவரது கண்களும் கலங்கின.

திமுக தொண்டர்களிடம் மட்டு மல்லாது, பொதுமக்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சட்டப்பேரவை உரை குறித்து துரைமுருகனிடம் ‘இந்து தமிழ்' நாளிதழ் சார்பில் பேசியபோது மீண்டும் உருகிவிட்டார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

சட்டப்பேரவையில் கருணாநிதி பற்றி பேசியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

45 ஆண்டுகளுக்கும் மேலாக கருணாநிதியோடு பயணித்தவன் நான். அவரது ஒவ்வொரு அசைவையும் நான் அறிவேன். என்னை முழுமையாக அறிந்தவரும் அவர் ஒருவரே. சாதாரண குடியானவனின் மகனாக, தகரப் பெட்டியை தலையில் சுமந்துகொண்டு சென்னைக்கு வந்தவன் நான். அப்படிப்பட்ட என்னை தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்தவர் கருணாநிதி. 40 ஆண்டுகள் எம்எல்ஏ, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சராக்கி அழகுபார்த்தவர்.  ‘துரை’ ‘துரை’ என்று அன்போடு அழைத்தவர். அப்படிப்பட்ட தலைவரின் மறைவை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

கருணாநிதி இருக்கும்போது திமுக மாநாடுகள், பொது நிகழ்ச்சிகளில் அவரைப் பற்றி பேசும்போதே நான் கண்கலங்கி விடுவேன். இரங்கல் தீர்மானத்தின் மீது பேசும்போது கருணாநிதியின் நினைவுகள் சட்டப்பேரவை என்பதையே என்னை மறக்கச் செய்துவிட்டன. குழந்தைபோல அழவைத்துவிட்டன. அந்த அளவுக்கு கருணாநிதி என்னுள் கலந்து விட்டவர்.

பேரவையில் கலைஞர் என விளித்து முதல்வர், துணை முதல்வர் பேசியதை எப்படி பார்க்கிறீர்கள்?

கருணாநிதியை கலைஞர்  என விளித்து முதல்வர், துணை முதல்வர், பேரவைத் தலைவர் ஆகியோர் பேசியது பண்பாட்டின் அடையாளம்.  இதற்காக அவர்களை நேரில் சந்தித்து ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். அரசியல் ரீதியாக எதிர் வரிசையில் இருந்தாலும் அனைவரிடமும் அன்புகொண்டு அரவணைத்தவர் கருணாநிதி. அதன் வெளிப்பாடே ஜன.3-ம் தேதி பேரவையில் எதிரொலித்தது.

நீங்கள் எம்ஜிஆரோடும் நெருங்கிப் பழகியவர். கருணாநிதி - எம்ஜிஆர் இருவரையும் இந்ததருணத்தில் எப்படி உணர் கிறீர்கள்?

எம்ஜிஆருக்கு நான் செல்லப்பிள்ளை. நான் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு அவரும் முக்கிய காரணம். என் மீது அவருக்கு கொள்ளைப் பிரியம். எப்போது பார்க்கத் தோன்றினாலும் கார்அனுப்பி வர வைப்பார். அவர்அதிமுகவைத் தொடங்கியதிலிருந்து என்னையும் அழைத்துக் கொண்டே இருப்பார். எனது கட்சி திமுக. எனது தலைவர் கருணாநிதி என உறுதியுடன் கூறினேன். அப்படியெனில் நான் யார் என கேட்டார். நீங்கள் என்னை வாழ வைத்த தெய்வம் எனக் கூறிவிட்டேன். கொண்ட கொள்கையில் நான் காட்டிய பிடிப்பு அவரை ஈர்த்தது. என்னைப் பாராட்டினார். எம்ஜிஆர், கருணாநிதி இருவரையும் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x