Published : 03 Jan 2019 03:22 PM
Last Updated : 03 Jan 2019 03:22 PM

ஜெயலலிதா இல்லம் அரசு நினைவிடமாக மாற்றும் விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதில் வருமான வரித்துறைக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை போயஸ் தோட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு செலவில் ஜெயலலிதா நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க கோரி டிராபிக் ராமசாமி மற்றும் வழக்கறிஞர் எம்எல்.ரவி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தனி நபருக்கு சொந்தமான இடங்கள் எந்த சட்டத்தின் அடிப்படையில் அரசு நினைவிடமாக மாற்ற அனுமதிக்கப்படுகிறது என விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் வெங்கடேசன் பதில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், சொத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு தண்டனை அறிவிக்கவில்லை என்றும், அவருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 100 கோடி ரூபாய் அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சொத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், அரசு மற்றும் தனியார் சொத்துகளை நினைவில்லமாக மாற்ற எந்த சட்டத்தின் கீழ் முடிவெடுக்கப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசும், மனுதாரர்களும் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கில் 7-வது மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள வருமான வரித்துறை இதுவரை பதிலளிக்காததால் அதற்கு அவகாசம் வழங்கி வழக்கை வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்யும் உத்தரவிட்டனர்.

வருமான வரித்துறை பதில் மனுவில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி ஏதும் உள்ளதா? ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபனை உள்ளதா இல்லையா? என்பது குறித்தும் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x