Published : 31 Jan 2019 12:45 PM
Last Updated : 31 Jan 2019 12:45 PM

100 நாள் வேலைத்திட்டம்: ஏழைகளின் ஊதிய பாக்கியை வழங்க மத்திய அரசு மறுப்பதா? - ராமதாஸ் கண்டனம்

100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் ஏழை மக்களின் ஊதிய பாக்கியை வழங்க மத்திய அரசு மறுப்பதா என, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முற்றிலுமாக செலவாகி விட்ட நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என்று மத்திய அரசு கைவிரித்து விட்டது. மத்திய அரசின் இந்த மனிதநேயமற்ற நிலைப்பாடு கண்டிக்கத்தக்கதாகும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக, நடப்பாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.55,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அத்துடன் வேறு வழிகளில் கிடைத்த நிதியையும் சேர்த்து இத்திட்டத்திற்கு ரூ.59,032 கோடி கிடைத்தது. இதில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை ரூ.58,701 கோடி செலவழிக்கப்பட்டு விட்ட நிலையில், 2019 ஆம் ஆண்டின்  தொடக்கத்தின் ரூ.331 கோடி மட்டுமே இருப்பு இருந்தது. அதைத்கொண்டு அடுத்த 3 மாதங்களுக்கு வேலை வழங்க முடியாது என்பதால், இத்திட்டத்திற்காக கூடுதலாக நிதி ஒதுக்கும்படி வலியுறுத்தியிருந்தேன்.

அதன்படி மத்திய அரசு கடந்த வாரம் ரூ.6,084 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால், ஆந்திரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே செய்யப்பட்ட வேலைகளுக்காக ரூ.4,101 கோடி  ஊதிய நிலுவை இருந்தது. மத்திய அரசு ஒதுக்கிய கூடுதல் நிதியிலிருந்து ஊதிய பாக்கி வழங்கப்பட்டது போக ரூ.2,000 கோடிக்கும் குறைவான தொகை தான் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்திடம் உள்ளது. இந்த நிதியும் ஜனவரி 31 வரை செய்யப்படும் பணிகளுக்கே போதுமானதாக இருக்காது. ஜனவரி வரையிலான கணக்குகள் முடிக்கப்படும் போது பல நூறு கோடி ஊதிய நிலுவை இருக்கும்.

வழக்கமாக ஜனவரி மாதத்துடன் வேளாண்மை சார்ந்த பணிகள் முடிவடைந்து விடும் என்பதால், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தான் ஊரகப்பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு தேவைப்படும். ஆனால், இத்திட்டத்திற்காக முதலில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நிதி என மொத்தம் ரூ. 65 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக செலவிடப்பட்டு விட்ட நிலையில்,  அடுத்த இரு மாதங்களுக்கு செலவழிக்க மத்திய ஊரக வளர்ச்சித்துறையிடம் நிதி இல்லை.

அதனால், அடுத்த இரு மாதங்களுக்கு வழங்கப்படும் வேலைகளுக்கான ஊதியம், இதுவரை வழங்கப்பட்ட வேலைகளுக்கான ஊதிய பாக்கி ஆகியவற்றை மாநில அரசுகளே வழங்க வேண்டும் என்றும், அடுத்த ஆண்டுக்கான நிதி கிடைத்த பிறகு மாநில அரசுகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அறிவித்திருக்கிறது. இது இரு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

முதலாவதாக தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்திடமும் இத்திட்டத்திற்காக ஒதுக்க நிதி இல்லை. அதனால், ஊரக ஏழை மக்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகலாம்; ஒருவேளை வேலை வழங்கப்பட்டாலும், அதற்கான ஊதியம் வழங்கப்படாது.

இரண்டாவதாக, அடுத்த இரு மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஊதியம், அடுத்த ஆண்டுக்கான நிதியிலிருந்து வழங்கப்பட்டால், அடுத்த ஆண்டில் இத்திட்டத்திற்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும் ஆபத்துள்ளது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்காததால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படும். நடப்பாண்டில் வேலை உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.4,155.20.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. மாநில அரசின் பங்களிப்பையும் சேர்த்து இந்தத் திட்டத்திற்கான நிதி ரூ.4,282.08 கோடியாக உயர்ந்தது.

ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இன்று வரையிலான 10 மாத காலத்தில் ரூ.4,397.55 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இது இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 102.70 விழுக்காடு ஆகும். அதாவது இத்திட்டத்தின்படி தமிழகத்திற்கு வழங்கப்பட்ட தொகையை விட ரூ.115.48 கோடியை தமிழக அரசு கூடுதலாக செலவழித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 70.27 லட்சம் பேருக்கு இந்தத் திட்டத்தின்கீழ் வேலை வழங்கப்படுகிறது. எனினும், இவர்களில் 24,509 குடும்பங்களுக்கு மட்டும் தான் 100 நாட்கள் வேலை தரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக 36.09 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. இது இத்திட்டப்படி வழங்கப்பட வேண்டிய வேலைவாய்ப்பு இலக்கில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான்.

தமிழ்நாட்டில் இத்திட்டத்தின்படி தொடங்கப்பட்ட 8.12 லட்சம் பணிகளில் 4.43 லட்சம் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 3.69 லட்சம் பணிகளை நிறைவு செய்ய குறைந்தது ரூ.3,000 கோடி தேவைப்படுகிறது. 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு 150 நாட்களுக்கு வேலை வழங்குவதாக அரசு உறுதியளித்துள்ளதால் அதற்கும்  கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. இந்நிதி வழங்கப்படாவிட்டால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு குறைந்தபட்சம் ரூ.3,000 கோடி உட்பட மொத்தம் ரூ.10,000 கோடி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x