Last Updated : 09 Jan, 2019 01:37 PM

 

Published : 09 Jan 2019 01:37 PM
Last Updated : 09 Jan 2019 01:37 PM

அரசியல்வாதிகளோடு கை கோர்க்காமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: அரசு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளோடு கை கோர்க்காமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கரூர் தோரணக்கால்பட்டியைச் சேர்ந்த சரவணன் உயர் நீதிமன்ற மதுரைகிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் நகராட்சிக்கென புதிய பேருந்து நிலையத்தை திருமாநிலையூரில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் அமைப்பது தொடர்பாக 2013 ஜூன் 20-ல் அரசாணை எண் 87 வெளியிடப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தக்கோரி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.

அதனை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, கடந்த  2017 பிப்ரவரி 28-ல் இரண்டு மாதங்களுக்குள்ளாக கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து மீண்டும் மாநகராட்சி ஆணையருக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை.

ஆகவே, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் பிரகாஷ், கருர் நகராட்சி ஆணையர் அசோக் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதோடு, கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ஹர்மந்தர் சிங், ஆணையர் பிரகாஷ், கருர் நகராட்சி பொறுப்பு ஆணையர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது செயலர் தரப்பில், கரூர் பேருந்து நிலையத்திற்கு  தெரிவு செய்யப்பட்ட இடத்தைவிட வேறு பொருத்தமான இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கில் கரூரில் பேருந்து நிலையம் அமைப்பதற்கென தேர்வு செய்யப்பட்ட இடமே ஆகச்சிறந்த இடம் என உங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இப்போது இவ்வாறு கூறுவது ஏற்கத்தக்கதல்ல. நீதிமன்றங்களோடு விளையாடாதீர்கள். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு கை கோர்க்காமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஆட்சியாளர்கள் மாறலாம். அரசு மாறாது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.

அதற்கு, செயலர் ஹர்மிந்தர் சிங் முதல்வரோடு கலந்தாலோசித்த பின்னரே இதுகுறித்து உறுதியளிக்க இயலும் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை எவ்வித நிபந்தனையுமின்றி நடைமுறைப்படுத்துவதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் நேரில் ஆஜராக தேவையில்லை. இல்லையெனில் நேரில் ஆஜராக வேண்டும். நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x