

பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சபாநாயகர் தனபாலை அரசுக் கொறடா ராஜேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கல்வீச்சு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் திங்கள் கிழமை தீர்ப்பளித்தது.
இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதால் அறிவிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதி தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
மக்கள் பிரதிநித்துவச் சட்டப்படி சிறை தண்டனை பெற்றால் எம்.பி., எம்எல்ஏ என மக்கள் பிரதிநிதி பதவிகள் தானாகவே பறிபோய்விடும். எனவே, நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து அமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ண ரெட்டி அன்றைய தினமே ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், அரசுக் கொறடா ராஜேந்திரன் இன்று (செவ்வாய்க்கிழமை) சபாநாயகர் தனபாலை சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை செய்தார். சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் சபாநாயகர் தனபாலை ராஜேந்திரன் சந்தித்தார். இந்த சந்திப்பு 5 நிமிடம் மட்டுமே நீடித்தது.
ஓசூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த பாலகிருஷ்ண ரெட்டியின் பதவி தற்போது பறிபோய் உள்ளதால், அத்தொகுதியை காலியானது என சபாநாயகர் சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்து 6 மாதங்களுக்குள் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, ஓசூர் தொகுதியை காலியானதாக அறிவிப்பது குறித்து சபாநாயகருடன் அரசுக் கொறடா ராஜேந்திரன் சந்தித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.