Published : 07 Jan 2019 09:26 AM
Last Updated : 07 Jan 2019 09:26 AM

மூதாட்டியிடம் செயின் பறித்து தலைமறைவான மேலும் ஒரு கொள்ளையன் கைது

பழவந்தாங்கலில் பைக்கில் சென்று மூதாட்டியின் நகையை பறித்து தப்பி தலைமறைவாக இருந்த மேலும் ஒரு கொள்ளையனை தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை நங்கநல்லூர் வ.உ.சி நகர், கணேஷ்பாபு குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெயலட்சுமி (64). இவர், கடந்த மாதம் 31-ம் தேதி மாலை 4 மணியளவில் பிசிசோ தெரபி சிகிச்சை பெறுவதற்காக அதே பகுதி எஸ்.பி.ஐ. காலனி 2வது குறுக்குத் தெரு வழியாக மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது  ஜெயலட்சுமியை பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர், அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க தாலியை பறித்துக் கொண்டு தயாராக பைக்கில் வந்த மற்றொரு கொள்ளையனுடன் தப்பினார்.

இந்த காட்சி பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. நகை பறிப்பு குறித்து பழவந்தாங்கல் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். முதல் கட்டமாக அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனையும், அவனது கூட்டாளியையும் போலீஸார் தேடினர். கொள்ளையர்களின் புகைப்படம் சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கிடையில், தனது 60-ம் கல்யாணத்துக்காக அணியப்பட்ட தாலி  கொள்ளையர்களால் வழிப்பறி செய்யப்பட்டது பற்றி மூதாட்டி வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நகை பறிப்பில் ஈடுபட்டது மதுரவாயலைச் சேர்ந்த ஓட்டுநர் கணேஷ் குமார் (26), அவரது நண்பர் புழுதிவாக்கத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் தினேஷ் (31) என்பதை தனிப்படை போலீஸார் கண்டுபிடித்தனர். முதல் கட்டமாக தலைமறைவாக இருந்த தினேஷ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கணேஷ் குமாரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மூதாட்டியிடமிருந்து பறிக்கப்பட்ட 9 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.    கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். துரிதமாக செயல்பட்டு செயின் பறிப்பு கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீஸாருக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மீட்கப்பட்ட நகை மூதாட்டி ஜெயலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x