Published : 29 Jan 2019 04:14 PM
Last Updated : 29 Jan 2019 04:14 PM

உயர் நீதிமன்ற கேள்வி எதிரொலி: பணியின் போது செல்போனில் பேசுவோர் மீது நடவடிக்கை: பெண் போலீஸ் சிக்கினார்

உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்து பணியின்போது செல்போனில் பேசும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் செல்போன் பேசியதாக பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவலர்கள் செல்போனைப் பயன்படுத்துவதைக் கண்காணிக்கவும் வழிகாட்டுதல் நெறிமுறை குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிஜிபி ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் எஸ்.ஐ. அதிகாரத்துக்குக் கீழ் உள்ளவர்கள் பணியின்போது செல்போனைப் பயன்படுத்த மேலதிகாரி தடைசெய்யும் பட்சத்தில் அதைப் பயன்படுத்தக்கூடாது என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்குகளை விசாரிக்கத் தொடங்கிய போது, தாம் உயர் நீதிமன்றத்திற்கு வரும் வழியில் போக்குவரத்து சிக்னல்களில், போக்குவரத்துக் காவலர்கள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல், மொபைல் போன்களைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், சிக்னல் விழுந்து வாகனங்கள் புறப்பட்ட போது, சாலை குறுக்கே ஒரு பெண்மணி ஓடிய போதும், அதை போக்குவரத்துக் காவலர்கள் கண்டுகொள்ளாமல், செல்போன்களைப் பார்த்துக் கொண்டிருந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர், எந்த சிக்னல் எனக் கேட்டதற்கு, போக்குவரத்துக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தாம் இதைக் கூறவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, பொதுமக்களின் உயிர், பாதுகாப்பு முக்கியம் எனவும், சென்னை நகரம் முழுவதும் போக்குவரத்து காவலர்கள் சரியாகப் பணியாற்றுவதில்லை எனவும், செல்போன்களில் பேசுவது, வாட்ஸ் அப் பார்ப்பது என்று இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.

இந்த விஷயத்தை டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி, அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி, இது சம்பந்தமாக அவர்கள் எடுத்த நடவடிக்கை குறித்து ஜனவரி 30-ம் தேதி (நாளை) தெரிவிக்கும்படி, உத்தரவிட்டார்.

இதையடுத்து மறுநாளே டிஜிபி சார்பில் ஒரு சுற்றறிக்கை அனைத்து காவல் ஆணையர்கள், எஸ்.பி.க்களுக்கு அனுப்பப்பட்டது. அதில் பணியின்போது செல்போன் பயன்படுத்துவது குறித்த தனது உத்தரவை கடுமையாகப் பின்பற்ற உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நாளை நீதிமன்றத்தில் அரசு அறிக்கை அளிக்க வேண்டிய நிலையில் பணியின்போது செல்போனில் பேசும் காவலர்களைப் பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.  இந்நிலையில் திருவாரூர் மாவட்ட முதல் நிலைக்காவலர் சங்கீதா ஆட்சியர் அலுவலக பாதுகாப்புப் பணியில் இருந்தபோது கைப்பேசியை பயன்படுத்தியதற்காக அவருக்கு மாவட்ட எஸ்.பி. மெமோ கொடுத்துள்ளார்.

இதுகுறித்து 5 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தப்பட்ச எண்ணிக்கையில் காவலர்களைப் பிடிக்கும்படி வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x