சுற்றுச்சூழலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் யூகலிப்டஸ், ஓக் மரங்கள்; அப்புறப்படுத்த நிபுணர் குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சுற்றுச்சூழலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் யூகலிப்டஸ், ஓக் மரங்கள்; அப்புறப்படுத்த நிபுணர் குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சுற்றுச்சூழலுக்கு அபாயத்தையும், சவாலையும் ஏற்படுத்தும் வகையில் தமிழக வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள யூகலிப்டஸ், சில்வர்ஓக் போன்ற வெளி நாட்டு மரங்களை முழுவதுமாக அப்புறப்படுத்துவது தொடர்பாக ஆராய நிபுணர் குழுவை அமைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக வனப்பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் யூகலிப்டஸ், சில்வர்ஓக் மரங்கள் மற்றும் வாட்டில், உன்னிசெடி போன்ற தாவரங்களை  அப்புறப்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு, ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட இந்த வகை தாவரங்களால் உள்நாட்டு தாவரங்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  நிலத்தடி நீரை முழுவதுமாக உறிஞ்சிவிடும் இவ்வகை மரங்களால் மலைப்குதிகளில் 60 முதல் 70 சதவீதம்வரை மரங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறி, அவற்றை அகற்றுவது குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் செருகுரி ராகவேந்திர பாபு தலைமையில், இந்திய அறிவியல் மற்றும் கல்வி மையத்தின் பேராசிரியர் வி.வி.ராமன், புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை பேராசிரியை பிரியா தேவிதார் உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர்கள் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த குழு, 2 மாதங்களுக்குள் அரசுக்கு பரிந்துரை வழங்க வேண்டும் எனவும்,  இந்த பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு தகுந்த  உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in