Published : 07 Jan 2019 10:58 AM
Last Updated : 07 Jan 2019 10:58 AM

நம்பகத்தன்மையை மீட்க தேர்தல் ஆணையம் இனிமேலாவது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: திருமாவளவன்

தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை மீட்பதற்கான நடவடிக்கைகளை இனிமேலாவது மேற்கொள்ள வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியத் தேர்தல் ஆணையம் திருவாரூரில் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை மீட்பதற்கான நடவடிக்கைகளை இனிமேலாவது மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டிய சூழலில் திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது எல்லோரிடத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 2016 பொதுத் தேர்தலின்போதும்,  ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்திலும் ஆளும் கட்சியின் சார்பில் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. 

ஆனால், தேர்தல் ஆணையம் அதில் உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. அது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற புகார்கள் எழுந்தன.  பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.  வருமான வரித்துறை அளித்த தகவலும் கூட மாநில அரசால் உதாசீனப்படுத்தப்பட்டது.

இந்தச் சூழலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும், அதுபோலவே  திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோதே இந்த இடைத் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால்,  பருவ நிலையைக் காரணம் காட்டி இங்கு இடைத்தேர்தல் நடத்த உகந்த சூழல் இல்லை என்று தலைமைச் செயலாளர் கூறியிருப்பதாகவும், எனவே, தேர்தல் பின்னர் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மழை பெய்யாத நேரத்தில் பருவநிலையைக் காரணம் காட்டித் தேர்தலை ஒத்திவைத்த ஆணையம் தற்போது 'கஜா' புயல் பாதிப்பில் இருந்து திருவாரூர் வாக்காளர்கள் விடுபடாத நிலையில், அங்கு புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அங்கு மட்டும் இடைத் தேர்தலை அறிவித்தது எல்லோருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

திருவாரூரில் மட்டும் தேர்தல் நடத்துவதற்குக் காரணம் என்ன? மற்ற 19 தொகுதிகளில் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை? என்பதைத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. 'தேர்தல் அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாக உள்ளது' என்ற குற்றச்சாட்டு அதனால்தான் எழுந்தது. இந்தச் சூழலில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகள் விசாரணைக்கு வர இருந்த நிலையில் தேர்தல் ஆணையமே முன்வந்து திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறோம்.

தமிழ்நாட்டு மக்களிடையே கேள்விக்குள்ளாகி இருக்கும் தனது நம்பகத்தன்மையை மீட்பதற்கான நடவடிக்கைகளை இனிமேலாவது தேர்தல் ஆணையம்  எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.  எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இந்த இருபது தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை  நடத்தும் என்றும் நம்புகிறோம்" என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x