Published : 16 Jan 2019 01:04 PM
Last Updated : 16 Jan 2019 01:04 PM

கோடநாடு ஆவணப்படம்: இறந்தவர் மீண்டும் வந்து சாட்சி சொல்வாரா? - அமைச்சர் ஜெயக்குமார்

கோடநாடு குறித்த ஆவணப்படத்தில் இறந்தவர்கள் முன்பு சொல்லியதை தற்போது எப்படி நம்ப முடியும் என, அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று (புதன்கிழமை) மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குகார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மதுவிலக்கை ஏன் முழுமையாக அமல்படுத்தவில்லை என வைரமுத்து கேள்வி எழுப்பியது குறித்து செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "வைரமுத்து நெருக்கமாக இருக்கும் திமுக தான் மதுவைக் கொண்டு வந்தது. அப்போது  ராஜாஜி எவ்வளவோ சொல்லியும் மதுவிலக்கை அமல்படுத்தாமல் திமுக தான் மதுவைக் கொண்டு வந்தது. 1998 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் கள்ளச் சாராயம் ஆறாகப் பெருகி ஓடியது. கிட்டத்தட்ட 39 பேர் அதனால் உயிரிழந்தனர்.

மதுவிலக்கை ஒரே நாளில் அமல்படுத்தலாம். ஆனால், அதன் விளைவு என்ன என்பதைப் பார்க்க வேண்டும். ஜெயலலிதா 500 மதுக்கடைகளையும், தற்போதைய முதல்வர் பழனிசாமி 500 மதுக்கடைகளையும் படிப்படியாக மூடினர். மது இல்லாத சமூகமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை. ஆனால், அதை ஒரே நாளில் செய்ய முடியாது. மூடப்பட்ட கடைகள் சில நீதிமன்ற உத்தரவின் படி தான் திறக்கப்பட்டிருக்கும். மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போல் மது அருந்துபவர்கள் தாங்களே திருந்த வேண்டும்" என தெரிவித்தார்.

இதையடுத்து, கோடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி மீதான குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "யார் இந்தப் பிரச்சாரத்தை செய்தனரோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், எங்களுக்கு மடியில் கனம் இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதனால், உடனடியாக தேர்தல் வருவதற்கு முயற்சி செய்கிறார். மக்களைத் திசை திருப்ப முடியாது.

அந்த ஆவணப்படத்தில் இறந்தவர்கள் முன்பு சொல்லியதை எப்படி இப்போது நம்புவது? இறந்தவர் மீண்டும் வந்து சாட்சி சொல்ல முடியுமா? இது புனையப்பட்ட குற்றச்சாட்டு. நிச்சயமாக சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வோம்" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x