

தனியார்மயத்தைக் கண்டித்து மத்திய அரசின் பாதுகாப்புத் துறை தொழிற்சாலை ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் 12 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.
பாதுகாப்புத் துறையில் தனியார் மயத்தை அனுமதிக்கக் கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசின் பாதுகாப்புத் துறை தொழிற்சாலை ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதை முன்னிட்டு, சென்னை ஆவடியில் உள்ள படைத்துறை உடைத் தொழிற்சாலை முன்பு அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டம் குறித்து அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் கூறியதாவது:
பாதுகாப்பு தளவாட உற்பத்தியை படைத் துறை தொழிற்சாலைகளில் இருந்து விலக்கி அவற்றை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதேபோல, பாதுகாப்புத் துறை ஊழியர்களின் உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய் வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, உத்தரவாதமில்லாத புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து பாதுகாப்புத் துறை தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய பிறகும், பாதுகாப்புத் துறை தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வரும் மத்திய அரசைக் கண்டித்து பாதுகாப்புத் துறை ஊழியர்களின் சம்மேளனங்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் 3 நாள் வேலை நிறுத்தம் இன்று (நேற்று) தொடங்கியது.
ஆவடியில் உள்ள படைத் துறை உடைத் தொழிற்சாலை, இன்ஜின் தொழிற்சாலை மற்றும் திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை, நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை ஆகியவற்றின் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில், தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பேரும், நாடு முழுவதும் 4 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இதனால், படைத் துறை தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஸ்ரீகுமார் கூறினார்.