

கோடநாடு விவகாரத்தில் ஆ.ராசாவைப் போல் பதவி விலகி முதல்வர் பழனிசாமி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா பற்றியும், அதில் நடைபெற்ற தொடர் கொள்ளைகள், கொலைகள் பற்றியும், அதற்கு முழுக் காரணம் தற்போதுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்றும், கொலைபற்றி 'தெகல்கா' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் மற்றும் சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்ட நபர்களான சயான் - வயலார் மனோஜ், ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
கொள்ளை, கொலை சம்பவங்கள் 'மர்மக் கதை' போல்...
ஜெயலலிதாவின் மரணம், அதற்கடுத்து சசிகலா கைது, பெங்களூரு சிறைவாசம் என்ற நிகழ்வுகளுக்குப் பிறகு அடுத்து சகலவிதமான பாதுகாப்புகளுடன் அமைந்த கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலை சம்பவங்கள் 'மர்மக் கதை' போல் நடந்துள்ளன.
1. கொடநாடு எஸ்டேட்டில் வைக்கப்பட்டிருந்த 27 சிசிடிவி கேமராக்களும் ஒட்டுமொத்தமாகச் செயல்படாது போனது.
2. 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கும் தனி இணைப்பை அந்த எஸ்டேட் பெற்றுள்ளது.
3. அது முன்னாள் முதல்வரின் அலுவலகமாகவும் அறிவிக்கப்பட்டு செயல்பட்டும் வந்துள்ளது.
4. ஜெயலலிதா மறைந்த இரண்டு மாதங்களில் கோடநாடு பங்களாவிலிருந்த ஓம் பகதூர் என்ற காவலாளி 'மர்மமான' முறையில் கொலை செய்யப்பட்டார்.
5. அதற்கடுத்து 29.4.2017 அன்று மாலை 5 மணிக்கு கேரளாவில் சயான் என்பவர் குடும்பத்தோடு சென்ற கார் விபத்தில் தன்னுடைய மனைவியை, குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டு அவர் மட்டும் தப்பித்துக் கொள்கிறார். இவர் 'தெகல்கா'வின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூசுடன் இருந்து தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுக்கும் காட்சி ஊடகங்களில் வந்தது.
6. 4.7.2017 அன்று சிசிடிவி கேமரா ஆப்ரேட்டர் தினேஷ்குமார் என்பவர் 'மர்மமான' முறையில் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரின் ஒப்புதல் வாக்குமூலம்
7. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் - கோடநாடு எஸ்டேட்டின் எல்லா இடங்களுக்கும் போகக்கூடிய வாய்ப்பும், நடைமுறையும் உள்ள கனகராஜ் என்பவர், எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படிதான் அங்கே இருக்கிற சில ஆவணங்கள், சில கணினிகள், மின்பொருள்கள், சில விவரங்கள், பென் டிரைவ் போன்றவற்றை பெற்றுச் சென்றோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன்பிறகு, கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் கொல்லப்பட்டார் என்ற செய்தியும் வருகிறது.
உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்திருக்க வேண்டாமா?
இவ்வளவு தொடர் சம்பவங்கள், குற்றங்கள் குறித்து அதிமுக அரசு இதுபற்றிய தீவிர விசாரணையை முடுக்கிவிட்டு, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்திருக்க வேண்டாமா? மற்ற சாதாரண காதல் கொலைகளில் காட்டிய அவசரத்தைக்கூட இதில் காட்டாது ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், அதுவும் 'தெகல்கா'வின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் உடன் இருந்து, தப்பித்த குற்றவாளிகள் தந்துள்ள வாக்குமூலங்களுக்குப் பிறகு, முதல்வர் புகார் கொடுத்து, அவர்களைக் கைது செய்வதன் மூலமே தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டுள்ள சந்தேகத்தை எளிதில் போக்கி விட முடியுமா?
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகி, தன்னைக் குற்றமற்றவர் என்று காட்டவேண்டும்
எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்தச் சம்பவம் பற்றிச் சுட்டிக்காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகி, தம்மை நீதி விசாரணைக்கோ அல்லது சிபிஐ அல்லது பதவியில் உள்ள நீதிபதிகள் மூலமோ குழு விசாரணை நடத்தி தன்னைக் குற்றமற்றவர் என்று காட்ட வேண்டும். இதற்காக ஸ்டாலினைத் தாக்கி சில கட்சிக்காரர்கள், அமைச்சர்களைவிட்டு அறிக்கை விடுவது மக்களின் சந்தேகத்தைப் போக்க எவ்வகையிலும் உதவாது.
'தெகல்கா' முன்னாள் ஆசிரியரின் பேட்டிக்குப் பின்னணியில் யார் என்பதைவிட, அது உண்மையா? கற்பனையா? பொய்யா? என்று காட்டவேண்டியது முதல்வரின் முக்கிய கடமையாகும். பதவியிலிருந்து விலகி, தாம் குற்றமற்றவர் என்று ஆன பிற்பாடு, பதவிக்கு வரலாம். பழி நீங்க வாய்ப்பு ஏற்படும். எதிர்கட்சித் தலைவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அத்துணை கட்சித் தலைவர்களும் இதனை வலியுறுத்தியுள்ளனர் என்பதும் முக்கியம். 'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்' என்பது பழைய ஆங்கிலப் பழமொழி. முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள்மீது பழி வந்தால், அதனை நீக்கிட ஆவன செய்யவேண்டும்.
2ஜி வழக்கின் அளவுகோல் - இதற்கும் வேண்டாமா?
2ஜி வழக்கில் இவர்கள் அதிமுக மற்ற பல கட்சிகளும், மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் மீது வழக்குப் போட்டு, ராசா பதவி விலகி, சிறையில் ஒன்றரை ஆண்டுகாலம் இருந்தார். கனிமொழி 6 மாதங்கள் செய்யாத குற்றத்திற்கு சிறையில் வதிந்தார். அது வெறும் அனுமான யூகத்தின் மீது சாட்டப்பெற்ற குற்றச்சாட்டு.
அதே அளவுகோல் - நடைமுறை அதிமுகவுக்கு - அதுவும் தொடர் கொலைகள் என்னும்போது உடனே மேல் நடவடிக்கை தொடரவேண்டாமா?இப்போது மூடினால், வருங்காலத்தில் இந்தக் கொலைகளுக்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளும், அவர்களின் செயல்களின் மூலங்களும், தூண்டியவர்கள் யார் என்பதும் கண்டுபிடிக்கப்படாமலா போகும்?
முதல்வர் பழியைத் துடைக்க முற்படுவதுதான் ஒரே நியாயம்!
ஜனநாயக மரபுப்படி பதவி விலகி, சரியான நீதி விசாரணையை சந்தித்து, முதல்வர் பழியைத் துடைக்க முற்படுவதுதான் ஒரே நியாயம்" என, கி.வீரமணி தெரிவித்துள்ளார்.