Published : 08 Jan 2019 10:40 AM
Last Updated : 08 Jan 2019 10:40 AM

ராசிபுரத்தில் விவசாயியிடம் புதையல் இருப்பதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது

புதையல் இருப்பதாகக் கூறி விவசாயிடம் ரூ.10 லட்சம் வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைத்தியரை ராசிபுரம் போலீஸார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மலைவேப்பங்குட்டையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (43). நாட்டு வைத்தியர். குறி சொல்லியும் வந்துள்ளார். இவரிடம் ராசிபுரம் சந்திரசேகரபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விவசாயி எம்.ராமசாமி (53) என்பவர் முழங்காலுக்கு சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில், ராமசாமி சிகிச்சைக்கு வந்தபோது, சுப்பிரமணி ஒரு நாள் சாமி ஆடியுள்ளார். அப்போது ராமசாமியின் வீட்டருகே புதையல் இருப்பதாகக் கூறியுள்ளார். இதை நம்பிய ராமசாமி, புதையல் எடுப்பதற்காக சுப்பிரமணியிடம் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார். தொடர்ந்து புதையல் எடுப்பதற்கு பரிகார பூஜை செய்வதாகக் கூறி அவ்வப்போது தவணை முறையில் ரூ.10 லட்சம் வரை சுப்பிரமணி பெற்றுள்ளார்.

ஆனால், அவர் குறிப்பிட்டபடி புதையல் எதுவும் எடுத்து தரவில்லை. அவரை ராமசாமி அணுகியபோதும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தட்டிக் கழித்து வந்துள்ளார். சந்தேகமடைந்த ராமசாமி இதுதொடர்பாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் ராமசாமியை ஏமாற்றி ரூ.10 லட்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுப்பிரமணியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது:

புதையல் இருப்பதாக ராமசாமியிடம் தெரிவித்த சுப்பிரமணி, அவருக்கு தெரியாமல் இரவு நேரத்தில் அவரது வீட்டருகே உள்ள வேப்பமரத்தின் கீழ் பள்ளம் தோண்டி ஒன்றரை அடி உயரம் கொண்ட உலோகத்தாலான நடராஜர் சிலையை புதைத்து வைத்துள்ளார்.

பின்னர், ராமசாமி கண் முன்னே அந்த சிலையை தோண்டி எடுத்து மீண்டும் புதைத்து வைத்துவிட்டு குறிப்பிட்ட நாளில் அந்த சிலையை தோண்டி எடுத்தால் புதையல் கிடைக்கும் எனக் கூறி ரூ.10 லட்சம் வரை பெற்றுள்ளார். இயைடுத்து சிலையை பறிமுதல் செய்த போலீஸார், வேறு நபரிடம் இதுபோல் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x