Published : 03 Jan 2019 05:21 PM
Last Updated : 03 Jan 2019 05:21 PM

வைகோவை விமர்சித்து கிண்டலுக்கு உள்ளான எஸ்.வி.சேகர்: பேட்டி எடுத்த செய்தியாளரே மறுப்பு

தனது மகன் சிகரெட் கம்பெனி ஏஜென்சி நடத்துவது குறித்து வைகோ 3 ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு விமர்சித்த எஸ்.வி.சேகரை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவரது பேச்சு மற்றும் அதிரடி கருத்துகளால் விமர்சிக்கப்படுவது வாடிக்கை. அவரது மகன் வையாபுரி ஐடிசி ஏஜென்சி எடுத்து நடத்தி வருகிறார். சுற்றுச்சூழல் குறித்து பேசும் வைகோவின் மகன் சிகரெட் கம்பெனிக்கு ஏஜென்சி நடத்தலாமா? என விமர்சிப்பவர்கள் உண்டு.

அதே நேரம் இதுகுறித்த கேள்விக்கு வைகோ 3 ஆண்டுகளுக்கு முன் பதிலளித்திருந்தார். அதில் அவர் ஏஜென்சிக்காக விண்ணப்பித்திருந்தார், அதில் பலரும் போட்டிப்போட இவருக்குக் கிடைத்தது. அதில் சிகரெட் மட்டுமல்ல கோதுமை, பருப்பு, தானிய வகைகள் இன்னும் பல உண்டு.

அந்த ஏஜென்சியை என் மகன் எடுக்காவிட்டால் வேறு யாராவது ஒருவர் எடுக்கத்தான் போகிறார், என் மகன் எடுத்ததால்தான் இங்கு வந்துள்ளது என்று அர்த்தமல்ல. சிகரெட்டை தமிழக அரசு தடைசெய்தால் முதல் ஆளாக நான் வரவேற்பேன். சிகரெட் குடிப்பவனால் அவனுக்குத்தான் தீங்கு, அவன் சிகரெட் குடித்துவிட்டு அதன் மூலம் எந்தப் பெண்ணுக்கும் பாலியல் தொந்தரவு அளிக்கப் போவதில்லை என பதிலளித்திருந்தார்.  

அவரது 3 ஆண்டு பழைய வீடியோ பேட்டியை அறியாத ஒருவர் கடந்த 31 டிசம்பர் அன்று எடுத்து ட்வீட் செய்திருந்தார். இதை நடிகர் எஸ்.வி.சேகர் இந்த ஆண்டின் சிறந்த உளறல் என புத்தாண்டு அன்று வைகோ பேட்டி அளித்ததுபோல் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவு:

S.VE.SHEKHER‏ @SVESHEKHER “2019-ம் ஆண்டின் முதல் உளறல். குழறல். விளங்கிடும். FIRST DOCTORATE IN SMOKING & SEX(RAPE). “சிகரெட் குடிச்சா அவனுக்கு மட்டும் கேடு.” குடிச்ச புகைய வெளில விட்டா எதிர்ல இருக்கிற எல்லாருக்கும் கேடு என்ற அடிப்படை ஞானமற்ற உளறல். BP160/140. ”  எனப் பதிவிட்டிருந்தார்.

பழைய செய்தியை அதன் உண்மைத்தன்மை பாராமல் புத்தாண்டு அன்று வைகோ பேட்டி அளித்ததுபோல் 2019-ம் ஆண்டின் முதல் உளறல் என எஸ்.வி.சேகர் பதிவு செய்ததற்கு அவரது பதிவின் கீழ் நெட்டிசன்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அந்தப் பேட்டியை எடுத்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரே உண்மைத்தன்மை அறிந்து பதிவு செய்யுங்கள் என எஸ்.வி.சேகரைக் கண்டித்துள்ளார்.

நெட்டிசன்கள் பதிவு வருமாறு:

தமிழன்‏ @uaejaffer  என்பவர் பதிவில் “இது இறந்து புதைந்த செய்தி ஐயா... சூழ்நிலை வரலாம்” என விமர்சித்துள்ளார்.

மனிலா ஹாஜாஷாம் (manila Hajasham‏) என்பவர் பதிவில் “அதை 2017-ல் நோட்டுக்குள் சிப் இருக்கிறது என்று சொன்ன விஞ்ஞானியா சொல்றது.” என கிண்டலடித்துள்ளார்.

விமல் (vimal‏ @vimalan1977 ) என்பவர் பதிவில் “எப்பொழுது கொடுத்த பேட்டி என்று சோதிக்கவும். அப்படியே ஃ பார்வர்டு செய்வது மட்டும் அடிப்படை ஞானம். ஆனாலும் அவர் சேகர் மாதிரி 2000 ரூவா நோட்டுல சிப்ஸு இருக்குன்னு கப்ஸா விடுற அளவுக்கு திறமையானவர் இல்லதான்” என பதிவிட்டுள்ளார்.

இளங்கோ (Elango‏ @Elango)  என்பவர் பதிவில் “2000 நோட்ல சிப் இருக்கறத விட கேவலமான உளறல் ஏதுமில்லை சார்” என விமர்சித்துள்ளார்.

அப்துல் ஹமீது (@abdulhameed9791) என்பவர் பதிவில்  “அப்படியே வடநாட்டில் உங்க மந்திரிங்க சொல்றத போடுங்க. இதை விட செமயா இருக்கும்” என கிண்டலடித்துள்ளார்.

இதற்கு முத்தாய்ப்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கண்ட கேள்வியை வைகோவிடம் கேட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் விஷ்ணு என்பவர் எஸ்வி.சேகரைக் கண்டிக்கும் விதத்தில் பதிலளித்துள்ளார்.

விஷ்ணுவின் (Vishnu‏ @johnvishnu) பதிவு: “அன்புள்ள எஸ்.வி.சேகருக்கு, நீங்கள் தெரியாமல், கவனிக்காமல் ஷேர் செய்த இந்த வீடியோ நடந்து முடிந்து 3 வருடமாகி விட்டது. வைகோ பதிலளிக்கும் கேள்வியை கேட்டது நான் தான். உங்களுடைய மத்திய பாஜக அரசு போலிச் செய்திகளை களைய பல்வேறு பிராயத்தனங்களை எடுத்து வருகிறது!!

அதனால் பொறுப்பு மிகுந்த இடத்தில் உள்ள நீங்களோ, உங்களது அட்மினோ இது போன்ற போலிச் செய்திகளை பரப்பாதீர்கள்! மத்திய அரசு பாரபட்சம் பார்க்காமல் உங்களை கைது செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் ரீடிவிட் செய்யவில்லை என்றால், தயவு செய்து உங்கள் அட்மினை கண்டிக்கவும்!!” என பதிவிட்டுள்ளார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x