Published : 09 Jan 2019 02:25 PM
Last Updated : 09 Jan 2019 02:25 PM

காவல் ஆணையர் அலுவலகம் அருகே வழிப்பறி; நகையை இழந்து துரத்திச் சென்ற வியாபாரி உயிரிழந்த விவகாரம்: மேலும் இரண்டு பேர் கைது

காவல் ஆணையர் அலுவலகம் அருகே வியாபாரி ஒருவரிடம் அரை கிலோ தங்கத்தை வழிப்பறி செய்த கும்பலால் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கியக் குற்றவாளிகளான இருவர் கைதாகியுள்ளனர்.

திருச்சியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (68). தங்கக்கட்டிகளை வாங்கி அதை நகையாகச் செய்து தரும் தொழில் செய்து வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி சென்னை வந்த அவர் தனது நண்பரான வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் ஒருவரிடம் நகைகளை செய்து தருவதற்காக ஒப்பந்தம் போட்டு அரை கிலோ தங்க நகைகளை வாங்கிக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் திரும்பினார்.

இடையில் ஒரு வேலையை முடித்துக்கொண்டு நேற்றிரவு மலைக்கோட்டை ரயிலைப் பிடிக்க எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வேப்பேரி வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது வேப்பேரி சம்பத் சாலையில் (கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள சாலை) இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அவரது கைப்பையைப் பறித்துச் சென்றனர்.

பையில் அரை கிலோ தங்க நகைகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த ரங்கராஜன் வழிப்பறி திருடர்களை தனது இருசக்கர வாகனத்தில் துரத்தியுள்ளார். திருடன் திருடன் என கத்திக்கொண்டே துரத்தி வந்தவர் காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கியதில் தூக்கி வீசப்பட்டு விபத்தில் சிக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

வழிப்பறி கொள்ளையர்களைப் பிடிக்கத் துரத்தியதால் ரங்கராஜன் உயிரிழந்த நிலையில் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் அதை விபத்து வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே தந்தை விபத்தில் உயிரிழந்தது குறித்து தகவலறிந்து வந்த ரங்கராஜனின் மகன் சீனிவாசன் (38) தனது தந்தை வைத்திருந்த கைப்பையை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்துக்கொண்டு ஓடும்போது அவர் துரத்தியதால் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். அவரது கைப்பையில் அரை கிலோ தங்க நகை இருந்தது என்று வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் வீரகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸார் பிரிவு 392-ன் (வழிப்பறி வழக்கு) கீழ் வழக்குப்பதிவு செய்து சவுகார்பேட்டையில் இருந்து எழும்பூர் வரையில் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைப் பெற்று ஆய்வு செய்தனர்.

அப்போது வழிப்பறி கொள்ளையர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவு எண்கள் போலீஸாருக்குக் கிடைத்தன. அதனடிப்படையில் திரட்டப்பட்ட தகவலை வைத்து சென்னை பாரிமுனையில் பதுங்கி இருந்த ராஜ்குமார், மகேந்திரகுமார், முகமது சித்திக் மற்றும் ஆனந்த் ஆகியோரை ஜூன் 4-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் 30 கிராம் தங்க நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை தேடிவந்த நிலையில் தலைமறைவுக் குற்றவாளியாக இருந்த பிராட்வே, புத்தி சாகிப் தெருவைச் சேர்ந்த ரகுமான் பாட்ஷா (28) என்பவர்  கடந்த நவ.29-ம் தேதி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

நேற்று அந்த வழக்கு சம்பந்தமாக ரகுமான் பாட்சாவை போலீஸ் காவலில் எடுத்து  விசாரணை நடத்தினர். இதில் ரகுமான் பாட்சா அளித்த தகவலின் பேரில் நந்தம்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இம்ரான்கான் (27), சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பயாசுதீன் (28) ஆகியோரை  போலீஸார் கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் வியாபாரியிடம் வழிப்பறி செய்த நகைகளை மீட்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x