சொகுசுக் காரை ஓட்டி சாலையில் தொடர் விபத்தை ஏற்படுத்திய சிறுவன்: துரத்திப் பிடித்த பொதுமக்கள் தாக்கு

சொகுசுக் காரை ஓட்டி சாலையில் தொடர் விபத்தை ஏற்படுத்திய சிறுவன்: துரத்திப் பிடித்த பொதுமக்கள் தாக்கு
Updated on
2 min read

வடசென்னையில்  சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது தொடர்கதையாகிறது. உறவினர் வீட்டுக்கு வந்த 17 வயது சிறுவன் சொகுசுக் காரை ஓட்டி தொடர் விபத்துகளை ஏற்படுத்தியதில் பொதுமக்கள் விரட்டிச் சென்றதில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

புதுவண்ணாரப்பேட்டை  இளைய முதலி தெருவில் உள்ள அடுக்குமாடியில் குடியிருப்பவர் ராம்ராஜ். இவரது அண்ணன் மகன் கார்த்திக் (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). விடுமுறை தினத்தில் சித்தப்பாவின் வீட்டுக்கு வந்த இவர் சித்தப்பாவின் புத்தம் புதிய சொகுசுக் காரைப் பார்த்துள்ளார்.

சித்தப்பாவிடம் காரை ஒரு ரவுண்ட் ஓட்ட அனுமதி கேட்டுள்ளார். 17 வயதுக்குக் கீழ் வண்டி ஓட்டக்கூடாது. வேண்டுமென்றால் ஆசைக்கு வீட்டு காம்பவுண்டில் ஒரு ரவுண்ட் அடித்துக்கொள் என்று சித்தப்பா கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

இந்நிலையில் வீட்டில் யாருமில்லாததைப் பயன்படுத்திக் கொண்ட கார்த்திக் சித்தப்பாவின் கார் சாவியை எடுத்து காரை ஸ்டார்ட் செய்துள்ளார். ஜாலியாக காம்பவுண்டில் ஒரு ரவுண்ட் வந்தவர் அப்படியே வெளியே வந்து வைத்தியநாதன் மேம்பாலம் சென்று அங்கு சுந்தரம் பிள்ளை நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காரை வேகமாகச் செலுத்தியுள்ளார்.

வழியில் ஒரு பெண் மீது மோதியுள்ளார். இதனால் பயந்துபோன அவர் காரை வேகமாகச் செலுத்தியுள்ளார். பொதுமக்கள் காரைத் துரத்தியுள்ளனர். இதனால் வேகமாக காரை செலுத்திய கார்த்திக் வழியெங்கும் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் மற்றும் பொதுமக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, வேகமாகச் சென்றுள்ளார்.

ஒருகட்டத்தில் கார் டயர் வெடித்து வீட்டின் அருகில் உள்ள மரத்தில் கார் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. கார் வரும் வழியில் பெரிய அளவில் விபத்து இல்லாமல் பொதுமக்கள் தப்பித்தாலும் ஆத்திரத்தில் காரில் இருந்த கார்த்திக்கை வெளியே இழுத்துப்போட்டு சிலர் தாக்கினர்.

சிலர் காரை கற்களைக்கொண்டு எறிந்தனர். இதனால் கார் நொறுங்கிப்போனது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீஸார் கார்த்திக்கை பத்திரமாக மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார்த்திக்கைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்தியது 17 வயது சிறுவன் என்பதால் மோட்டார் வாகனச் சட்டப்படி காரின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆனால் இதுவரை நடந்த விபத்துகளில் பெற்றோர் அல்லது கார் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸார் சமரசம் பேசுவதே இதுபோன்ற விபத்துகள் நடப்பதற்குக் காரணமாக அமைகிறது என அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

கடந்த பொங்கல் தினத்தன்று இதே போன்று ஒரு சிறுவன் காரோட்டியதில் ஏற்பட்ட விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் பலியானார். இதில் போலீஸார் பெற்றோர் மீது நடவடிக்கை எடுத்தார்களா? என்பது கேள்விக்குறியே. விபத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு காரைக் கொடுத்தவர் மீது வழக்கு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in