அரசு அலுவலர் தேர்வு ஆணையத் தேர்வுகளை மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும்:மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்

அரசு அலுவலர் தேர்வு ஆணையத் தேர்வுகளை மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும்:மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்
Updated on
2 min read

அரசு அலுவலர் தேர்வு ஆணையத் தேர்வுகளை மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தினார். அவருடைய கருத்தை பல்வேறு மாநில உறுப்பினர்களும் ஆதரித்துப் பேசினர்.

மாநிலங்களவையில் நேற்று திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது:

''இந்திய அரசின் கீழ் இயங்கிவரும் அரசு அலுவலர் தேர்வு ஆணையம் அரசின் அமைச்சரவையிலும் துறைகளிலும் பல்வேறு துறைகளுக்கான அலுவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பான அமைப்பாக உள்ளது. துறை அலுவலகங்களுக்கான அலுவலர்களையும் அது தேர்வு செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலர் ஆணையம் அரசிதழ் பதிவு பெறாத அலுவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்வுகளையும், நேர்முகத் தேர்வுகளையும் நடத்தி வருகிறது.

அரசு அலுவலர் தேர்வு ஆணையம் அலகாபாத், டெல்லி, கல்கத்தா, பெங்களூரு, சென்னை மற்றும் கவுஹாத்தி ஆகிய ஏழு மண்டல அலுவலகங்களைப் பெற்றுள்ளது. அது இரண்டு துணை மண்டல அலுவலங்களையும் பெற்றுள்ளது. முன்னர் அலுவலர் தேர்வு ஆணையம் இந்த தேர்வுகளை பெரு மண்டல (Zonal) அளவில் நடத்தி வந்தது.

ஆனால் இப்போது இந்தத் தேர்வுகள் தேசிய அளவில் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றது.

எனவே, நாட்டின் இதர பகுதிகளைச் சேர்ந்த இந்தி அறியாதவர்கள் அரசுப் பணிகளில் சேருவதற்கான வாய்ப்பைப் பெற முடியாத நிலைமை உள்ளது. அதன் மூலம் பெரும்பாலோர் வேலைவாய்ப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் திறமைசாலிகளாகவும் மிகவும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருந்தபோதிலும் இந்தி தெரியாத காரணத்தால் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர்.

மத்திய அரசின் தேர்வாணையக் குழு (யு.பி.எஸ்.சி.,) தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது, அரசு அலுவலர் தேர்வு ஆணையத்தால் ஏன் எல்லா மாநில மொழிகளிலும் அந்தத் தேர்வுகளை நடத்த முடியாது? அதே போன்று நேர்முகத் தேர்வுகளையும் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த முடியாதா? இவை பெருமண்டல (ஜோனல்) அளவில் நடத்தப்பட வேண்டும். முன்னர் அரசுப் பணியாற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலை வாய்ப்பு பெற்று வந்தனர்.

எனவே, இது மிகவும் முக்கியமான தீவிரமான பிரச்சினை. எனவே அலுவலர் தேர்வு ஆணை யத்தை அழைத்துத் தேர்வு களையும், அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஏற்கனவே இருந்தது போல பெரு மண்டல (ஜோனல் அளவுகளில் இந்தத் தேர்வுகளை நடத்தவேண்டும் என்றும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.

உடனே தமிழக உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எழுந்து இது முக்கியமான பிரச்சினை. உறுப்பினருடைய கருத்தை நான் ஆதரிக்கிறேன் என்று குறுக்கீடுகளுக்கிடையே கூறினார்.

அதேபோன்று, அவரைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த கே. கே.ராஜேஷ், சத்தீஸ்கரைச் சேர்ந்தரன் விஜய்சிங் சுதேவ், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவேக் கோ துங்கா, ஒடிசாவைச் சேர்ந்த அனுபவ மொகந்தி ஆகியோரும் திருச்சி சிவாவின் கருத்துக்கு தங்கள் ஆதரவை அவையில் பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ''இது குறித்து அலுவலர் நலத்துறை அமைச்சர் இது முக்கிய பிரச்சினையாக இந்தக் கருத்தில் தங்கள் ஆதரவைப் பதிவு செய்ய ஒவ்வொரு உறுப்பினரும் விரும்புகின்றனர். எனவே அலுவலர் நலத்துறை அமைச்சர் இது குறித்து கவனம் செலுத்தி செய்ய இயன்றதைச் செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in