

பணி மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என டிஜிபி டி.கே. ராஜேந்திரன் பேசினார்.
போலீஸாருக்கான மன அழுத்தம் குறைத்தல், பிரச்சினைகளுக்கு கவுன்சலிங் மூலம் தீர்வு காணுதல் தொடர்பாக காவலர் நிறைவாழ்வு பயிற்சிப் பட்டறை வாரம்தோறும் 3 நாட்கள் நடக்கிறது. பயிற்சியில் தலா 40 காவலர்கள் வீதம் பங்கேற்கின்றனர். 3-வது நாள் நடக்கும் பயிற்சியில் குடும்பத்தினரும் பங்கேற்கின்றனர். காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியன், ஹேமமாலா உட்பட 4 பேர் பயிற்சி அளிக்கின்றனர்.
இந்நிலையில் காவலர் நிறை வாழ்வு பயிற்சிப் பட்டறை மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. மதுரை நகர், புறநகர், 6-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் என, 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் டிஜிபி பேசியதாவது:
வெளியில் நடக்கும் பிரச்சினைகளை வீட்டுக்குள் கொண்டு செல்லக்கூடாது. இதற்கு இந்திராநூயி போன்ற பெரிய பொறுப்புகளில் இருந்தவர்களை உதாரணமாகக் கூறலாம். பணி மட்டும் முக்கியமல்ல. உடல் ஆரோக்கியம், குடும்பத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
காவல்துறையின் பணி முக்கியமானது. அதிகாரமிக்க பணி எனக் கருத வேண்டாம். அதில் கஷ்டம் உள்ளது என்ற நினைப்பும் தேவையற்றது. ஓய்வுபெறும் வரை மட்டுமே சீருடை அணிய முடியும். இந்த வாய்ப்பு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
25 வயதுக்குப் பின் பணியில் சேருகிறோம். 58-ல் ஓய்வு பெறுகிறோம் எனில் இடைப்பட்ட வயதில் சரியாக இருக்க வேண்டும் என்றார்.
சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி விஜயகுமார், தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், டிஐஜி பிரதீப் குமார், துணை ஆணையர் மகேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், 6-வது பட்டாலியன் கமாண்டர் சுகுமாறன், மருத்துவர் சிஆர். சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.