Published : 22 Jan 2019 03:32 PM
Last Updated : 22 Jan 2019 03:32 PM

நடிகர் அஜித் தொழில் பக்தி கொண்டவர்; தைரியமானவர்: அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு

நடிகர் அஜித் தொழில் பக்தி கொண்டவர் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பின், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா?

கூட்டணிக்கான கதவுகளை நாங்கள் மூடவில்லை. அதற்கான கதவுகள் திறந்திருக்கின்றன. ஆனால், யார் கூட்டணியில் இணைய வேண்டும், இணையக் கூடாது என்பது குறித்து அனைவரும் சேர்ந்து முடிவெடுப்போம். தனியொருவர் அதனை முடிவு செய்ய முடியாது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை.

கோடநாடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வர் மீது குற்றம் சுமத்தியுள்ளாரே?

எந்தக் கொம்பனாலும் அதிமுகவை உடைக்க முடியாது. ஆயிரங்காலப் பயிராக, நிழல் தரும் மரமாக அதிமுக விளங்கும். இப்போது, அதிமுகவுக்கு எதிராக உப்பு சப்பில்லாத ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள். இதிலும் மண்ணைக் கவ்வுவார்கள். கோடநாடு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு திமுகவினர் ஜாமீனுக்காக உதவியுள்ளனர். இதில் பெரிய ஆளவுக்கு மர்மம் இருக்கிறது. உரிய விசாரணை நடைபெற்று சட்டத்தின் முன் குற்றவாளிகள் நிறுத்தப்படுவர்.

இந்த விவகாரத்தில் விசாரணையை எதிர்கொள்ள முதல்வர் தயங்குகிறாரா?

விசாரணைக்குத் தயங்கவில்லை. அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

அரசியலில் ஆர்வம் இல்லை என நடிகர் அஜித் கருத்து தெரிவித்துள்ளாரே?

அஜித் தொழில் பக்தி கொண்டவர். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர். அது பாராட்டத்தக்க விஷயம். மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 'பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா' நடைபெற்றபோது, மேடையிலேயே நிகழ்ச்சிக்கு வருவதற்கு தாங்கள் எவ்வாறு வற்புறுத்தப்பட்டோம் என்பது குறித்து தைரியமாகச் சொன்னார். என் ஆதரவு யாருக்கும் இல்லை என துணிச்சலாகக் கூறியுள்ளார். திறந்த மனதுடன் தன் நிலையை வெளிப்படுத்தியிருக்கிறார். நல்ல விஷயம். தெளிவான பதிலை அளித்திருக்கிறார்.

ஜெயலலிதா சிகிச்சை குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறாரே?

அதுகுறித்து நான் கருத்து சொல்ல முடியாது. விசாரணை ஆணையம் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

தலைமைச் செயலகத்தில் சாமி கும்பிடக்கூடாது என ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே?

தலைமைச் செயலகத்தில் 20 சங்கங்கள் ஆண்டுதோறும் ஆயுத பூஜை கொண்டாடுகின்றனர். இறைவனை வழிபடுவது தவறா? ஸ்டாலின் போன்று சிறுபிள்ளைத் தனமான தலைவர் இருப்பதால் தமிழக மக்கள் வெட்கித் தலைகுனிகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x