Last Updated : 18 Jan, 2019 11:22 AM

 

Published : 18 Jan 2019 11:22 AM
Last Updated : 18 Jan 2019 11:22 AM

100 ஆண்டுகளாக பொங்கலைத் தவிர்க்கும் கிராமம்; விழிப்புணர்வுக்காக 17 ஆண்டுகளாகப் பொங்கலிடும் தனி மனிதர்

நாமக்கல் அருகே கடந்த 100 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையைத் தவிர்த்து வரும் கிராமத்தில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் 17 ஆண்டுகளாக தனி மனிதராக பொங்கல் வைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகை தவிர்க்கப்பட்டு வருகிறது. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இக்கிராமத்தில் பொங்கல் பண்டிகையைத் தவிர்க்க காரணம் என்ன என்ற கேள்விக்கு கிராம மக்கள் கூறும் பதில் மக்களிடம் பண்டிகை குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதைக் காட்டியது.

பண்டிகை உற்சாகம்

சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். உழவுத்தொழிலில் பிரதானமானது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல் பண்டிகையை உற்சாகத்தோடு கொண்டாடிய இக்கிராம மக்கள் தற்போது பொங்கல் பண்டிகையை வெறுப்பதோடு, கிராமங்களில் பொங்கல் பண்டிகையின்போது வீடுகளில் வெள்ளையடித்து, உழவுத் தொழிலுக்கு மரியாதை செய்யும் வகையில் கால்நடைகளுக்குப் பொங்கலிட்டு வணங்குவதையும் தவிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, "கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் முன்னோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கோயில் அருகே பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அப்போது சாமிக்கு வைக்கப்பட்ட பொங்கலை நாய் சாப்பிட்டது. இதை அபசகுணமாக கருதிய எங்கள் முன்னோர் அடுத்தடுத்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகையைத் தவிர்த்தனர். மேலும், பொங்கலைத் தவிர்த்த மறு ஆண்டு பொங்கல் பண்டிகை சமயத்தில் கிராமத்தில் உள்ள கால்நடைகள் இறந்தன. தொடர்ந்து இதுபோல நடந்து வரும் சம்பவங்கள் நடந்ததால், பொங்கல் கொண்டாட்டத்தைத் தவிர்த்து விட்டோம். அதேவேளையில் கிராமக் கோயில் திருவிழா உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாடி வருகிறோம்" என்றனர்.

தன்னம்பிக்கை ஆசிரியர்

எனினும் இக்கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான இளங்கோ என்பவர் மக்களிடம் நிலவும் அவநம்பிக்கையைப் போக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை கடந்த 16 ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை வழக்கம் போல இளங்கோ மட்டும் கொண்டாடினார். இவரது கொண்டாட்டத்தில் அவரது உறவினர்கள் ஒருசிலரைத் தவிர யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது.

இதுகுறித்து இளங்கோ கூறும்போது, "பொங்கல் பண்டிகை கொண்டாட மக்களை வலியுறுத்தி வருகிறேன். கடந்த 16 ஆண்டுகளாக மாட்டுப் பொங்கல் வைத்துக் கொண்டாடி வருகிறேன். இந்த ஆண்டும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினேன். ஆனால், கிராம மக்கள் யாரும் வரவில்லை. இருப்பினும் மக்களிடம் விழிப்புணர்வு வரும் வரை நான் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவேன்" என்றார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x