

டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாகச் செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிராகரித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களைத் திட்டமிட்டு மறைத்து டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இதே போன்ற வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டி.கே.ராஜேந்திரன் மீதான லஞ்சப் புகார் குறித்த வருமான வரித்துறையின் கடிதம், கோப்புகளை ஆராய்ந்த போது கிடைக்கவில்லை என தமிழக தலைமைச் செயலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு மறைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் 2017 நவம்பரில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில், சசிகலாவின் அறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. ராஜேந்திரனின் நலன் கருதியே, அந்த ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
ஆகவே, டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பு நியமனத்தை சட்டவிரோதம் என அறிவித்து உத்தரவிட வேண்டும். குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐயின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அமைத்து, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், 2013 தமிழ்நாடு காவலர் சட்ட விதிப்படி புதிதாக டிஜிபியை நியமிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, எதிர்மனுதாரர்கள் பலருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. நோட்டீஸ் அனைவருக்கும் சென்றடைந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், மத்திய, மாநில அரசுகள் தரப்பில் எவ்வித பதில் மனுக்களும் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில், மனுதாரர் தரப்பில் டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாகச் செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டுமெனக் கோரினார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரரின் இடைக்கால கோரிக்கையை நிராகரிப்பதாக உத்தரவிட்டும், இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்று உரிய உத்தரவை பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.