

வேளச்சேரி அருகே மோட்டார் பைக் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியதில் அதை ஓட்டிவந்த மென்பொறியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக இருப்பவர் மனோகரன் (55). இவரது மகன் அஸ்வின் குமார் (30). பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இன்று அதிகாலை வேளச்சேரி சர்வீஸ் சாலை அருகே அஸ்வின் குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாலை சரிவரத் தெரியாத நிலையில் அவர் சென்ற இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அஸ்வின் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்தது குறித்து பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் அஸ்வின் குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால் தான் அஸ்வின் மதுபோதையில் இருந்தாரா? என்ற விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.