

கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உதகை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சயான், மனோஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் ஜாமீனில் உள்ள மனோஜ், சயான் ஆகியோர் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் அவர்களின் ஜாமீனையும் ரத்து செய்யக் கோரி காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த உதகை நீதிமன்றம், சயான், மனோஜ் ஆகியோர் ஜனவரி 29-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனோஜ், சயான் தரப்பில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (வெள்ளிக்கிழமை) முறையீடு செய்யப்பட்டது.
முறையீட்டை கேட்ட நீதிபதி, மனுத்தாக்கல் நடைமுறை முடிந்தால், திங்கட்கிழமை (ஜனவரி 28) விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளார்.