Published : 13 Sep 2014 11:36 am

Updated : 13 Sep 2014 11:38 am

 

Published : 13 Sep 2014 11:36 AM
Last Updated : 13 Sep 2014 11:38 AM

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

புதுமைப்பித்தனின் சிறந்த கதைகளில் ஒன்று ‘செல்லம்மாள்'. அவருடைய சிருஷ்டிகரம் உச்சம் பெற்ற காலம் அது. செல்லம்மாளை எழுதிய அதே 1943-ம் ஆண்டிலேயே, காஞ்சனை, சாபவிமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கதைகளையும் அவர் படைத்திருக்கிறார்.

செல்லம்மாள், அப்பெயர் கொண்ட கதையின் தலைவி, எல்லா அர்த்தத்திலேயும். அவள் பிரமநாயகம் பிள்ளையின் மனைவி. பிள்ளையின் பிதா, கொஞ்சம் பூஸ்திதி உடையவர்தான். பிதா காலமானதும், பாகப்பிரிவினை. பிள்ளைக்கு அவர் உடம்பு மட்டுமே மிஞ்சியது. அதையும் புது மனைவியையும் சுமந்துகொண்டு சென்னைக்கு வருகிறார். சென்னை அவரைச் சிவமாக்கவில்லை. மாறாக, ஒரு ஜவுளிக் கடைச் சிப்பந்தியாக்கியது. செல்லம்மாளின் உடம்புக்கு வந்த நோய் ஊதியத்தில் பாதியைத் தின்றது.


இறுதி மூச்சுவரை

கதையின் முதல் வரி செல்லம்மாளின் மரணத்தைச் சொல்வதில் தொடங்குகிறது. “செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது. நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்”.

செல்லம்மாளுக்கு அவள் உயிர் பிரியும் அந்தக் கடைசிக் கணம் வரைக்கும் கணவர் பிரமநாயகம் பிள்ளை மனைவிக்குச் சிசுருஷை செய்துகொண்டிருக்கிறார்.

மனைவி இறப்பைக் கண்டு பிள்ளை அழுது கதறித் துடிக்கவில்லை. புதுமைப்பித்தன் வடிவமைக்க விரும்புவது, பிரிவுச் சோகத்தை அல்ல. மாறாக, பிரமநாயகப் பிள்ளை செல்லம்மாளின் காதலை. அவர்கள் தங்கள் காதலைப் பரஸ்பரம் கொண்டாடிக்கொண்ட விசேஷம் பற்றி. பிள்ளையும் சரி, செல்லம்மாளும் சரி காதலைப் படித்ததில்லை, காதலைப் பற்றிப் பேசிக்கொள்வதும் இல்லை.

செல்லம்மாளின் இறப்பைப் பிள்ளை எப்படி எதிர் கொள்கிறார்? சக தர்மிணியாக இருந்த ஒரு ஜன்மத்துக்குத் துன்பச்சுமை குறைந்துவிட்டது என்பதிலே அவருடைய மனசுக்கு ஒரு நிம்மதி என்கிறார் புதுமைப்பித்தன்.

முதல் நாள் இப்படி விடிகிறது. பிள்ளை சாப்பாட்டு மூட்டையுடன் நடையைத் தாண்டும்போது செல்லம்மாளுக்கு எழுந்து நடமாட முடிந்தது. இரவு அவர் திரும்பும்போது திருப்தியுடன் சாப்பிட அவருக்குப் பிரியமான காணத் துவையலும், ஒரு புளியிட்ட கறியும் வைக்கப் போவதாகச் சொல்கிறாள்.

பிள்ளைக்கு இஷ்டமில்லை. “இன்னைக்குத்தான் சித்தெ தலெ தூக்கி நடமாடுதெ. வீணா உடம்பெ அலெட்டிக்கிடாதே' என்று மனைவியை எச்சரிக்கிறார். முந்தின இரவுதான் அவள் நெஞ்சு வலிக்குப் பிள்ளை ஒற்றடமிட்டுக்கொண்டிருந்தபோது, மூன்று கோரிக்கைகளை அவள் வெளியிடுகிறாள். 1. வரும் பொங்கலுக்கு வீட்டு அரிசி சாப்பிட வேணும், 2. ஊருக்கு ஒருக்க போய்ப்போட்டு வரலாம், 3. வரும்போது நெல்லிக்காய் அடையும் ஒரு படி முருக்கு வத்தலும் எடுத்துக்கிட்டு வரணும்.

செல்லம்மாளின் ஆசை, இவ்வளவுதான். ஆனால் பிள்ளை அதை எப்படி எதிர்கொண்டார்.

“அதற்கு என்ன பார்த்துக்கொள்வோமே! இன்னும் புரட்டாசி கழியலியே; அதற்கப்புறமல்லவா பொங்கலைப் பற்றி நினைக்கணும்' என்றார்.

“அது சரிதான்; இப்பமே சொன்னாத்தானே அவுக ஒரு வழி பண்ணுவாக' என்கிறாள் செல்லம்மாள். “அவுக' என்றது முதலாளியை.

“தீபாவளிக்கு ஒங்க பாடு கவலை இல்லே. கடையிலேருந்து வரும். இந்த வருஷம் எனக்கு என்னாவாம்?” செல்லம்மாள் கணவனிடம் சிரித்துப் பேசியது இவ்வளவுதான். அன்று மாலை பிள்ளை மூன்று புடவைகளை முடிந்துகொண்டு வருகிறார். ஆனால் செல்லம்மாள் பிரக்ஞை தவறி விழுந்துக் கிடக்கிறாள். புழக்கடைக்குப் போகும்போது, அவர் பார்வை சமையற்கட்டில் விழுந்தது. உணவெல்லாம் தயாரித்து வரிசையாய் எடுத்து அடுக்கி இருந்தது.

இம்மாதிரி உடம்பை வைத்துக்கொண்டு சமையல் செய்திருக்கிறாளே என்று நினைத்தபடிக் குத்து விளக்கை ஏற்றி வைத்துவிட்டுச் செல்லம்மாளருகில் வந்து உட்கார்ந்தார். கையும் காலும் ஜில்லிட்டிருந்தன. கற்பூரத் தைலத்தை உள்ளங்கையில் ஊற்றி சூடு ஏறும்படித் தேய்த்துவிட்டுக் கமறலான அதன் நெடியை மூக்கருகில் பிடித்தார். பிரயோஜனம் இல்லை. சுக்கைச் சுட்டுப் புகையை மூக்கருகில் பிடித்தார். செல்லம்மாள் சிணுங்கிக்கொண்டே ஏறிட்டு விழித்தாள்.

பிள்ளை உறங்கலாம் என்று யோசிக்கும்போது, கோழி கூவுகிறது. வெளியே உலகம் துயில் எழுவதை ஓசை ரூபமாகச் சொல்கிறார் புதுமைப்பித்தன்.

எழுந்திருந்ததும் சுடச் சுடக் கொடுத்தால் நலம் என்று எண்ணிக் கருப்பட்டிக் காப்பி போடுகிறார். செல்லம்மாள் விழித்து எழுகிறாள். அவள் வாழ்வின் கடைசி நாளை வாழப்போகிறாள்.

கணவனின் பணிவிடை

கணவர் “கருப்பட்டிக் காப்பிப் போட்டிருக்கேன், பல்லைத் தேய்க்க வெந்நி எடுத்துத் தரட்டுமா' என்று கேட்கிறார். பதிலாக மனைவி, “வெந்நியை எடுத்துப் பொறவாசல்லெ வச்சிருங்க, நான் போய்த் தேச்சுக்கிடுதேன்' என்கிறாள்.

“நல்ல கதையாத்தான் இருக்கு; நேத்து கெடந்த கெடப்பெ மறந்து போனியா?' “ஒங்களுக்குத்தான் என்ன, வரவர அசிங்கம், கிசிங்கம் இல்லாமெப் போகுது.'

எழுகிறாள். கால் தள்ளாடுகிறது. பிள்ளை தாங்கிப் பிடித்துக்கொண்டு புழக்கடைக்குக் கொண்டு போய் உட்கார வைக்கிறார். காபி எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார். சற்று ஆசுவாசம் கொண்டவளை அமர்த்திவிட்டு வைத்தியரை அழைத்துக்கொண்டு வருகிறார். இதற்கிடையில் செல்லம்மாள் தன் சக்தியை மீறிய காரியமாக அடுப்படியில் தோசை சுட்டுக்கொண்டிருக்கிறாள். கை நடுக்கத்தால் தோசை மாவு சிந்திக் கிடந்தது.

பிள்ளை கொண்டுவந்த புடவைகளைப் புரட்டிப் பார்த்த செல்லம்மாள், “எனக்கு இந்தப் பச்சைதான் பிடிச்சிருக்கு. என்ன விலையாம்?” என்கிறாள். “அதப்பத்தி என்ன” என்கிறார் பிள்ளை.

பிள்ளைக்குச் சீக்கிரமே நிலைமை மாறுவது உறைக்கிறது. பயம் ஏற்படுகிறது. செல்லம்மாளுக்கும் அதே பயம். பால் திரிந்துவிட்டது. பானகத்தைக் கொணர்ந்து வாயில் ஊற்றினார். அது வழிந்துவிட்டது. தொட்டுப் பார்த்தார்.

உடல்தான் இருந்தது.

அரைக் கண்ணை முழுமையாக மூடினார்.

மிதமான வெந்நீரில் உடலைக் குளிப்பாட்டினார். அந்தப் பச்சைப் புடவையைச் சுற்றினார். வந்த கடைப் பையனிடம், தந்தி எழுதிக் கொடுத்தார். செல்லம்மாள் உடம்புக்குச் செய்ய வேண்டிய பவித்திரமான பணிவிடைகளைச் செய்து முடித்துவிட்டு அதையே பார்த்து நின்றார். அதிகாலை.. வெளியில் இரட்டைச் சங்கு பிலாக்கணம் கொடுத்தது... என்கிற கடைசி வரியோடு கதை முடிகிறது.

புதுமைப்பித்தன், மிகவும் சாவதானமாக எழுதிய, நுட்பமும் ஆழமும் கொண்ட கதை இது. சாவதானம் என்பது கதைக்குத் தேவைப்படும் வடிவத்தையும், தகவல்களையும் தந்து நிறைவு செய்கிற, உழைப்பும் பொறுப்பும் கொண்ட கவனம். மிகவும் சிறப்பாக உருவாக வேண்டிய கதைக் கருக்களைப் பல காரணங்களால் அவசரம் காட்டி முடிக்கும் சுபாவம் கொண்டவர் அவர்.

ஆனால் செல்லம்மாளை மிக நிதானமாகச் செதுக்கியிருக்கிறார். புதுமைப்பித்தனின் பெண்கள், அகலிகை போலச் சில விதிவிலக்குகள் தவிர, பெரும்பாலோர் சாதாரண ஆசைகளையும், நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பற்றுப் பரிதாபத்துக்குரியவர்கள். இது அவர் காலம், கீழ் மத்தியதரப் பெண்களுக்குத் தந்த வாழ்க்கை. செல்லம்மாளுக்கும் “வரும் தீபாவளிக்கு ஒரு புடவையும், பொங்கலுக்கு வீட்டரிசியும், நெல்லிக்காய் அடையும், முருக்க வத்தலும்'தான். இவைகூட அவள் அடையப் பெறாமல்தான் சாகிறாள். ஆனால் புதுமைப்பித்தனிடம் புலம்பல், ஓலம் இல்லை.

பெண் வர்க்கத்தின் கதை

கதை முழுக்கச் செல்லம்மாளே நீக்கமற நிறைகிறாள். அவள் அதிகம் பேசுவதில்லை. அதிலும் செல்லம்மாள் மரணமுறும் அந்தக் கடைசி இரண்டு தின வாழ்க்கைதான் கதை. கணவர் செய்யும் சிசுருஷை, பேசும் பேச்சுகளாகக் கதை வளர்ந்தாலும், புதுமைப்பித்தன் கட்டி எழுப்புவது செல்லம்மாள் என்கிற மனுஷியை. செல்லம்மாள் என்கிற தனி மனுஷியை அல்ல.

துணையோடு இருந்தும் தனியாக, உறவு இருந்தும் அநாதையாக, சொல் தெரிந்தும் பேச முடியாதவர்களாக, வீட்டின் புழக்கடையில் நிறுத்தப்பட்ட பெண் வர்க்கத்தை. ஒரு இனத்துக்காகப் புதுமைப்பித்தன் பேசுகிறார். கோஷத்தை வெறுப்பவர், சத்தம் போடுவதை நிராகரிப்பவர் ஆகிய புதுமைப்பித்தன், செல்லம்மாள்களை அவர்களின் வெளிப்படுத்தப்படாத சோகங்களை அவர்கள் பக்கம் நின்று பேசுகிறார்.

உண்மையில் செல்லம்மாளைக் ‘காஞ்சனை' கதை எழுதும் போது புதுமைப்பித்தன் மனதுக்குள் எழுதத் தொடங்கிவிட்டார் என்பது என் யூகம். காஞ்சனையில் வரும் எழுத்தாளர் மனைவி தன் உடம்புக்கு முடியவில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பாள். அந்தப் பெண்ணுக்குக் கணவன் அனுசரணை இல்லை. செல்லம்மாளோ, கணவன் அன்பையும் பெரும் காதலையும் ருசிப்பவள். என்றாலும், முத்தம் கொடுத்துப் பசியாற முடியாதே. அன்புக்குப் பிரதியாக உப்பு மிளகாய் கிடைப்பதில்லை.

செல்லம்மாள், அவள் இழப்புகளால் அமிழ்ந்து போகவில்லை. புதுமைப்பித்தனின் செல்லம்மாள், திமிறி எழுகிறாள். அவளது பிருமாண்டத்துக்கு முன் புருஷன் பிரமநாயகம் பிள்ளை சிறுத்துத்தான் போகிறார். கணவன் என்ற கொழுகொம்பின் ஆதரவு செல்லம்மாளுக்குத் தேவைப்படவில்லை. காரணம், அவள் கொடி அல்ல; தனிமரம்.

புதுமைப்பித்தன்செல்லம்மாள்சிருஷ்டிகரம்பெண் கதாபாத்திரம்பெண் கதைபெண் வர்க்கம்ஆணாதிக்கம்காஞ்சனை

You May Like

More From This Category

More From this Author