

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, அரசுத் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணம் கிருஷ்ணா பள்ளியில் 2004, ஜூலை 16-ல் நேரிட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த கும்பகோணம் நீதிமன்றம் கடந்த ஜூலை 30-ல் தீர்ப்பளித்தது.
தண்டனை பெற்றவர்களைத் தவிர, முன்னாள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பி. பழனிச்சாமி, முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் ஆர். நாரயணசாமி, முன்னாள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஜே. ராதாகிருஷ்ணன், வி. பாலசுப்பிரமணியன், முன்னாள் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கே. பால கிருஷ்ணன், ஜி. மாதவன், கும்பகோணம் கிருஷ்ணா தொடக்கப் பள்ளி ஆசிரியைகள் பி. தேவி, ஆர். மகாலட்சுமி, டி. அந்தோணியம்மாள், நகராட்சி முன்னாள் ஆணையர் ஆர். சத்தியமூர்த்தி, நகராட்சி முன்னாள் நகரமைப்பு அதிகாரி கே. முருகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த 11 பேரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு விவரம்:
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் இருந்து 11 பேர் விடுதலை செய்யப்பட்டது சட்டவிரோதம். பள்ளியில் கீற்றுக் கொட்டகை இருந்ததே விபத்துக்குக் காரணம். அதிகாரிகள் கண்காணித்து கீற்றுக் கொட்டகையை முன்கூட்டியே அகற்றியிருக்க வேண்டும். அதிகாரிகள் பள்ளியில் முறையாக ஆய்வு மேற்கொண்டிருந்தால் தீ விபத்தை தடுத்திருக்கலாம். சமையல் கூடத்தையாவது ஆய்வு செய்திருக்க வேண்டும்.
சத்துணவுத் திட்டத்துக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை ஏற்க முடியாது. கட்டிட அனுமதி, கட்டிட உறுதித்தன்மை சான்றிதழ் வழங்குவது அதிகாரிகள்தான். பள்ளித் தாளாளர் சொல்லியதை கேட்டு ஆய்வு நடத்தாமல் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது, குற்றத்துக்கு அதிகாரிகள் துணையாக இருந்ததை காட்டுகிறது.
மேலும், குழந்தைகளை கீற்றுக் கொட்டகையில் வைத்துவிட்டு ஆசிரியைகள் வெளியே சென்றுள் ளனர். தீ விபத்து நடைபெற்றபோது ஆசிரியைகள் குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடாமல், அவர்களது உடைமை களை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர். அரசுத் தரப்பு சாட்சியம், ஆவணங்களை கருத்தில் கொள்ளாமல் 11 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ். மணிக்குமார், வி.எஸ். ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசின் மேல்முறையீடு மனுவை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.