Published : 08 Jan 2019 04:24 PM
Last Updated : 08 Jan 2019 04:24 PM

கடத்தப்பட்ட நரிக்குறவர் தம்பதியின் குழந்தையை 96 நாட்களுக்குப் பின் மீட்ட போலீஸார்: நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த பெற்றோர்

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் கடந்த செப்டம்பர் மாதம் கடத்தப்பட்ட நரிக்குறவர் தம்பதியின் 3 வயதுப் பெண் குழந்தை 96 நாட்கள் கழித்து நீண்ட தேடலுக்குப் பின் மீட்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (26). இவரது மனைவி காளியம்மாள் (22). நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு ஹரிணி என்ற 2 வயது குழந்தை உள்ளது. கடந்த செப்டம்பர் 15-ம் தேதி செய்யூர் அணைக்கட்டு பகுதியில் பாசிமணி விற்கச் சென்றனர். பின்னர் அதே பகுதியில் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது அருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை ஹரிணி திடீரென மாயமானது.

அப்போது அவரது தாயார் காளியம்மாள் 8 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். தங்களது குழந்தை காணாமல் போனது குறித்து அழுது புலம்பிய அவர்கள் காஞ்சிபுரம் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காஞ்சிபுரம் போலீஸார் 3 தனிப்படைகள் அமைத்து குழந்தையைத் தேடி வந்தனர். ஆனால் கடந்த 96 நாட்களாக குழந்தை என்ன ஆனது என்பது தெரியாமலே இருந்தது. அவரது குழந்தையைத் தேடி போலீஸார் கடும் முயற்சி மேற்கொண்டனர். குழந்தை மீட்கப்படும்வரை செய்யூரைவிட்டுச் செல்லாமல் தம்பதிகள் அங்கேயே இருந்தனர்.

இந்தச் செய்தி வைரலானது. சமீபத்தில் நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், வெங்கடேசனை அழைத்துப் பேசி தைரியப்படுத்தி தான் நடத்திவரும் குழந்தைகள் அமைப்புமூலம் இரண்டு மாதங்களாக ஹரிணியைத் தேடிவருவதாகவும், மும்பையில் ஹரிணி போன்று ஒரு குழந்தை இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், மும்பையில் பிரபல ஆர்ட்டிஸ்ட் மூலமாக அந்த கமிஷனரிடம் பேசி, ஹரிணியை மீட்பது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அது வேறு குழந்தை என்பது தெரியவந்தது. இதனிடையே குழந்தை கொல்கொத்தாவில் இருப்பதாகத் தெரியவந்ததன்பேரில் அங்கும் எஸ்பி தலைமையில் தனிப்படை போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது அது ஹரிணி இல்லை எனத் தெரியவந்தது. போலீஸாரின் தொடர் முயற்சி தொடர்ந்தது. ஹரிணியை மீட்கும் முயற்சியில் தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டன.

இதனிடையே தீவிர தேடுதல் வேட்டையில் குழந்தை ஹரிணி திருப்போரூரில் பிரகாஷ் என்பவர் வீட்டில் உள்ளதாகத் தெரியவந்ததன்பேரில் அதிகாலையில் அங்கு சென்ற போலீஸார் குழந்தையை மீட்டனர். அப்போது மீட்கப்பட்ட குழந்தை வெங்கடேசன், காளியம்மாள் தம்பதியினரின் குழந்தை என்பது உறுதியானது. குழந்தையைப் பெற்றோர் ஆரத்தழுவி கண்ணீர் வடித்தனர்.

குழந்தையும் பெற்றோரிடம் ஒட்டிக்கொண்டது. பிரகாஷைப் பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில் குழந்தை இல்லாத தம்பதிக்காக ஹரிணியைக் கடத்தி பல லட்சம் ரூபாய்க்கு விற்றதாக தெரிவித்துள்ளார். குழந்தையை வாங்கிய சங்கீதா மற்றும் அவரது கணவர் இருவரையும் விசாரிக்க போலீஸார் சென்றனர். சங்கீதாவின் கணவர் தலைமறைவாகிவிட்டார்.

சங்கீதாவிடம் குழந்தையை விலைகொடுத்து வாங்கியது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். குழந்தை கிடைத்த தகவல் அறிந்து நேரில் அங்கு சென்ற காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி ஹதிமானி குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தார். குழந்தையைப் பெற்ற பெற்றோர் கண்ணீர் வடித்தபடி நன்றி தெரிவித்தனர்.

குழந்தை காணாமல்போய் 96 நாட்கள் ஆகியும் போலீஸார் சாதாரணமானவர்கள்தானே என விட்டுவிடாமல் கடும் முயற்சி எடுத்து தேடி கண்டுபிடித்ததற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடையே பாராட்டு குவிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x