Published : 28 Sep 2014 01:36 PM
Last Updated : 28 Sep 2014 01:36 PM

2001-ல் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா

கடந்த 2001-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது செல்லாது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.

டான்சி நில பேரம் தொடர்பான இரண்டு வழக்குகளில் கடந்த 9.10.2000 அன்று தீர்ப்பளித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், ஒரு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகளும் மற்றொரு வழக்கில் 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்தது.

இந்நிலையில், 2001-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிப் பட்டி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டிருந்த காரணத்தால், தேர்தலில் போட்டி யிட தகுதியில்லை என்று கூறி அவரது வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். இதனால், அவர் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

எனினும் தேர்தல் முடிவில் அதிமுக பெரும்பான்மை இடங் களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை யடுத்து, அப்போது ஆளுநராக இருந்த பாத்திமா பீவியிடம் ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார். ஆளுநர் அனுமதி அளிக்கவே, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை 2001-ம் ஆண்டு மே 14-ம் தேதி பதவியேற்றது.

ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநர் பாத்திமா பீவியின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதல்வராக ஜெய லலிதா பதவியேற்றது செல்லாது என 21.9.2001 அன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை பதவி விலக நேர்ந்தது.

அன்று மாலை நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்ட மன்ற கட்சித் தலைவராக ஓ.பன் னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. இதுபற்றி அப்போது கருத்து தெரிவித்த ஜெயலலிதா, “இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்று விரைவிலேயே மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பேன்” என்று கூறினார்.

மீண்டும் முதல்வரானார்

அதன்பிறகு டான்சி வழக்குகளில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து 4.12.2001 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து 21.2.2002 அன்று நடந்த ஆண்டிப்பட்டி சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

பின்னர் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச் சரவை பதவி விலகியது. 2.3.2002 அன்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x